பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த பழனி மலையின் இராஜ கோபுரத்திற்கு அருகே ஒரு பக்தர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஒரு நிகழ்வு தான் பாதுகாப்பில் ஏற்பட்ட விரிசலை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரபல வார இதழனா ஜூனியர் விகடன் சமீபத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை பக்தர்கள் மத்தியிலும் ஏன் அரசியல் வட்டாரத்திலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜூ.வி-ன் அந்த கட்டுரையில் பழனி மலைக்கோயில் பாதுகாப்புப் பேரவையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் பேட்டியின் இடம்பெற்றுள்ளது. பழனி கோயிலில் பாதுகாப்பு கேள்விக்குறியா உள்ளது என்று தெரிவித்துள்ள அவர், யார் யாரோ கோயிலுக்குள் சுற்றித்திரிவதாவும் கூறியுள்ளார். மேலும் அவர், இந்த சம்பவம் ஆட்சி மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் கூறி அதிமுக வட்டாரத்தின் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர், “இங்க உள்ள ஒப்பந்தப் பணியாளர்களுக்கு முறையான அடையாள அட்டை இல்லை. அதை யாரும் செக் (கண்காணிப்பது) பண்றதுமில்லை. இதை முறைப்படுத்தணும். சனிக்கிழமை நிறைஞ்ச அமாவாசை அன்னிக்கு சம்பவம் நடந்திருக்கு. பழனிகோயில்ல நடந்த இந்த மரணம் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. இந்த கோவில்ல நடக்கற நல்லது கெட்டது அனைத்தும் ஆட்சியில மாற்றத்தை ஏற்படுத்தும்.”
சமூக விரோதிகள் கோயில்களைக் குறி வைத்து தாக்கி பல்வேறு பிரச்சனைகளை உருவாக்க காத்திருக்கும் தற்போதய சூழலில் முக்கிய தளங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியமாகிறது.