Home Featured தமிழ் நாடு தேர்தலால் ஆலயங்களுக்கு அரசியல்வாதிகள் படையெடுப்பு – பழனியில் சசிகலா தரிசனம்!

தேர்தலால் ஆலயங்களுக்கு அரசியல்வாதிகள் படையெடுப்பு – பழனியில் சசிகலா தரிசனம்!

1023
0
SHARE
Ad

சென்னை – திராவிடக் கட்சிக்காரர்கள் என்றால் பகிரங்கமாக ஆலயங்களுக்கு செல்ல மாட்டார்கள் என்ற நிலை மாறி இப்போது, திராவிடக் கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலயங்களுக்கு செல்வதும், பூஜைகள், யாகங்கள் நடத்துவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

அதிலும், சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள், பிரார்த்தனைகளுக்காக பிரபல ஆலயங்களுக்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர்.

பழனிக்கு சசிகலா வருகை

#TamilSchoolmychoice

Sasikala-Palani visitபழனி கோவிலில் சசிகலா…

தமிழகத்தில் உள்ள பிரபல கோவில் பழனி முருகன் ஆலயத்திற்கு  முதல்வர் ஜெயலலிதாவின் தோழி நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் சசிகலா சென்றுள்ளார்.

சசிகலாவுக்கு ஆலய நிர்வாகம் வரவேற்பு அளித்ததோடு, அவரது வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

சசிகலா வருகையால் மற்ற பக்தர்கள் பழனி முருகனை தரிசனம் செய்வது சுமார் இரண்டு மணி நேரம் தடைப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து சசிகலா பழனி முருகன் கோவிலுக்கு சென்றது ஜாதக ரீதியான காரணங்களுக்காகத்தான் – அதுவும் செவ்வாய் கிரகத்திற்கு உரிய தெய்வமாகக் கருதப்படும் முருகனை வழிபட்டு, சில பிரார்த்தனைகள் செய்வதற்காகத்தான் சசிகலா பழனி சென்றார் என தமிழகத்தின் தகவல் ஊடகங்கள் ஆரூடங்கள் வெளியிட்டுள்ளன.

கும்பகோணம் மகாமகத்திற்கு ஜெயலலிதா-சசிகலா வருவார்களா?

இதனைத் தொடர்ந்து இன்று முதல் தொடங்கும் கும்பகோணம் மகாமகத் திருவிழாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவும் வருகை தருவார்களா என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் இதேபோன்ற கும்பகோண மகாமகத் திருவிழாவுக்கு வருகை தந்தபோது அதனால் ஏற்பட்ட களேபரத்தினால் சில பக்தர்கள் உயிரிழந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனால், தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகாமகத்திற்கு வருகை தருவது அந்த எதிர்மறையான நினைவுகளை வாக்காளர்களிடையே ஏற்படுத்தும் என்பதால் ஜெயலலிதா மகாமக வருகையைத் தவிர்த்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடியும், கும்பகோண மகாமகத் திருவிழாவுக்கு வருகை தரக் கூடும் என்ற ஆருடங்களும் எழுந்துள்ளன.