மென்லோ பார்க் (கலிபோர்னியா) – அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தை பார்வையிட்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
அந்த நினைவுப் பரிசின் சிறப்பு என்னவென்றால், பல ஆண்டுகளுக்கு முன் லீ உருவாக்கிய கணினி கட்டளைகளில் இருந்து எடுக்கப்பட்ட கோடுகளின் மூலம் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு ஆகும்.
அதாவது, கடந்த 1980-ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட சி ++ (C++) கட்டளைகளின் மூலம், சுடோக்கு (Sudoku) என்ற புதிர் விளையாட்டில் சிக்கல்களைத் தீர்பதற்கான வழிமுறைகளை உருவாக்கினார் லீ சியான் லூங்.
அதை, கடந்த ஆண்டு மே மாதம் தான் பேஸ்புக்கில் வெளியிட்டார். அது உலகளவில் பெரும் வரவேற்பினைப் பெற்றது.
இந்நிலையில், அந்த கணினி கட்டளையில் இருந்த கோடுகளைப் பயன்படுத்தி, தனது கலைப்படைப்பு உருவாக்கி அதை லீ-க்கு நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார் மார்க்.
இது குறித்து இன்று மார்க் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில், “பேஸ்புக் தலைமையகத்திற்கு வருகை புரிந்திருக்கும் பிரதமர் லீ சியாங் லூங் அவர்களை வரவேற்பதில் பெருமையடைகின்றேன். உலகத் தலைவர்களிலேயே கட்டளைகள் உருவாக்கத் தெரிந்த ஒரே பிரதமர் இவர் (லீ சியான் லூங்). அவரது தொழில்நுட்ப அறிவை அங்கீகரிக்கும் விதமாக அவர் எழுதிய கணினி கட்டளையை வைத்தே உருவாக்கப்பட்ட இந்த கலைப்படைப்பை பிரதமருக்கு வழங்குகின்றோம். கட்டளைகள் மிகவும் பயனுள்ளவை – என்ன வேலை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல” என்று மார்க் தெரிவித்துள்ளார்.
படம்: மார்க் சக்கர்பெர்க் பேஸ்புக்