கோலாலம்பூர் – இரண்டு நாட்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் திடீரென ஒரு பரபரப்பு. எம்எச்370 விமானத்தின் விமானி சஹாரி அகமட் ஷா உயிருடன் இருக்கிறார். தைவானில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது அந்தச் செய்தி.
அந்த செய்தி வெளிவந்ததோ சர்ச்சைக்கே பெயர் போன ‘worldnewsdailyreport’ என்ற இணையதளத்தில் இருந்து .
“பிரேசில் பெண் வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டு, கர்ப்பத்தோடு வீடு திரும்பினார்” இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுவது தான் அந்த இணையதளம்.
இந்த இணையதளத்தில் உள்ள செய்தியை நம்பி கருத்துத் தெரிவித்து தான் தற்போது நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார் முன்னாள் மலாக்கா முதலமைச்சர் டான்ஸ்ரீ ராஹிம் தம்பிசிக்.
அப்படிப்பட்ட இணையதளத்தில் இருந்து செய்தி வந்திருக்கிறது என்று தெரியாமல் மலேசியர்கள் பலர், அத்தகவலைப் பற்றி பரபரப்பாக பேசி வந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாங் தியாங் லாய், நேற்று அத்தகவல் பொய்யானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
“நாங்கள் தைவானில் இருந்து எந்த ஒரு உறுதியான தகவலையும் பெறவில்லை என்பதோடு தைவானில் இருக்கும் நமது தூதரகமும் அப்படி ஒரு தகவலை மறுத்துள்ளது” என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எம்எச்370 விமானத்தில் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இது போன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் லியாவ் கேட்டுக் கொண்டுள்ளார்.