புத்ராஜெயா – ஈப்போ பாராட் தொகுதி முன்னாள் மஇகா பொருளாளர் என்.சிதம்பரம் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த மூவரைக் கூட்டரசு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இவ்வழக்கில் ஏ.மணிமாறன் (வயது 27), எஸ்.சரவணன் (வயது 32) மற்றும் கே.பெருமாள் (வயது 34) ஆகியோருக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கும் தண்டனை பாதுகாப்பானது அல்ல என்றும், அம்மூவருக்கும் எதிராக பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கு சரியான வகையில் ஆதாரங்களுடன் நிலைநிறுத்தப்படவில்லை என்றும் கூறி கூட்டரசு நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது.
இது குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி மொகமட் ராவுஸ் ஷாரிப் தலைமையிலான 5 பேர் அடங்கிய குழு வெளியிட்டுள்ள தீர்ப்பில், “எங்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள இம்மூவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் தண்டனை பாதுகாப்பானது அல்ல.” என்று தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில், கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி, ஈப்போ உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்த விற்பனையாளர் மணிமாறன், வர்த்தகர் சரவணன் மற்றும் பாதுகாவலர் பெருமாள் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.