புதுடெல்லி – உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே ‘பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ’ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றுள்ளது.
அதில் கலந்து கொண்ட இந்தி நடிகர் ஷாருக்கானும், சல்மான்கானும், அங்கு காளி கோயில் போன்று அமைக்கப்பட்டிருந்த செட்டில் காலணி அணிந்தவாறு இருந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பு ஆன போது, அதனைக் கண்டு ஆத்திரமடைந்த இந்து மகாசபை மீரட் பிரிவு தலைவர் பரத் ராஜ்புத், ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் மீது உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மீரட் நீதிமன்ற சிறப்பு நீதிபதி சஞ்சய் குமார் சிங், ஷாருக்கானும், சல்மான் கானும் கோயிலுக்குள் செல்வதாக கூறப்படும் காணொளிக் காட்சியை நேற்று பார்வையிட்டார்.
பின்னர், இவ்வழக்கின் மறுவிசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.