ஐதராபாத் – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோகித்தின் தாயாரை சந்திப்பதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று ஐதராபாத் வந்தார்.
அங்கு மத்திய பல்கலைக்கழக வளாகத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்துப் பேசினார்.
பின்னர், இறந்த மாணவர் ரோகித்தின் தாயாரைச் சந்தித்த அவர் ஆறுதல் கூறினார். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும், ரோகித்தின் போராட்டத்தைப் பற்றியும், ராகுலிடம் அவரது குடும்பத்தினர் எடுத்துரைத்தனர்.
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஆய்வு மாணவரான வெர்முலா ரோகித்தின் (22), கல்லூரில் ஏற்பட்ட புறக்கணிப்பு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரம் தேசிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பின்னணி?
ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் வட்டத்தில் உறுப்பினராக இருந்துள்ளார் ரோகித்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாகூப் மேனன் தூக்கிலிடப்படுவதற்கு எதிராக சக மாணவர்களுடன் இணைந்து அவர் போராட்டங்களை நடத்தியுள்ளார்.
அந்தப் போராட்டத்தின் போது, பாஜக-வுடன் தொடர்புடைய அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பினர் பல்கலைக்கழக மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
மேலும், எதிர்தரப்பு மாணவர்கள் தங்களை தாக்கியதாக அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் அந்த மாணவர்கள் மீது முதற்கட்ட விசாரணையை தொடங்க அனுமதியளித்தது. பின்னர், மத்திய அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழகம் தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
கல்லூரி நிர்வாகத்திற்கு ரோகித் எழுதிய உருக்கமான கடிதம்
ரோகித் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
துணை வேந்தர் அப்பா ராவிற்கு, அவர் கைப்பட எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “மாணவர்கள் சேர்க்கைக்காக பல்கலைக்கழகத்திற்கு வரும் போதே, நீங்கள் அம்பேத்கரை படிப்பதாக இருந்தால் இதை உபயோகியுங்கள் என்ற வழிகாட்டுதலுடன் தயவு செய்து 10 மில்லி கிராம் சோடியம் அசைட்டை (கொடிய விஷம்) கொடுத்து விடுங்கள். இதேபோல் கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் உற்ற துணையான தலைமைக் காப்பாளரிடம் நல்ல தாம்புக்கயிறையும் கொடுத்து விடுங்கள்” என்று மிகுந்த மன வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தானும் தன்னுடைய நண்பர்களும் ஏற்கனவே தலித் சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதாகவும் அவ்வளவு எளிதாக அதிலிருந்து வெளியேற இயலாதென்றும் தெரிவித்துள்ள அவர், “மரியாதைக்குரியவர்களே, தயவு செய்து என்னைப் போன்ற மாணவர்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்” என்றும் வேதனை பொங்க இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை எழுதிய மூன்று நாட்களுக்கு பிறகு, கடந்த டிசம்பர் 21-ம் தேதி ரோகித் உள்ளிட்ட 5 மாணவர்களை விடுதி நிர்வாகம் புறக்கணிப்பு செய்ய முடிவெடுத்தது.
உணவகம், நூலகம் என மற்ற மாணவர்கள் பயன்படுத்தும் பொதுவெளி எதையும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் மனம் நொந்த ரோகித் இரண்டு வாரகாலமாக பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே கூடாரம் அமைத்து பாதிக்கப்பட்ட பிற மாணவர்களுடன் இணைந்து போராடி வந்துள்ளார்.
கல்லூரி நிர்வாகம் அவர்கள் எந்த ஒரு கருணையும் காட்டாததால், கடந்த ஞாயிறு மாலை ரோகித் தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.