கோலாலம்பூர், மார்ச் 14 – பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா, சபா விவகாரத்தில் அம்னோவிற்கு எதிராக கருத்து வெளியிட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் இன்று காலை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தியான் சுவா சார்பாக வாதாட அவரது வழக்கறிஞர்கள் என் சுரேந்திரன், லத்தீபா கோயா, வில்லியம் லியோங், எரிக் பால்சென் மற்றும் மேலும் இருவர் உடன் வந்திருந்தனர்.
விசாரணைக்குப் பின், நிபந்தனையின் பேரில் நீதிமன்றம் அவருக்கு பிணைத்தொகையாக 5000 ரிங்கிட் விதித்து, ஒருவரின் உத்திரவாதத்துடன் அவரைப் பிணையில் விடுவித்தது.
லகாட் டத்துவில் சுலு படையினரின் ஊடுருவல் தொடர்பாக தியான் சுவா கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெளியிட்ட கருத்தில், சபா விவகாரத்திற்கு அம்னோ தான் காரணம் என்றும், சபாவில் அத்துமீறி குடியேறியவர்கள் மீதான ஆர்.சி.ஐ விசாரணையில் மக்களின் கவனத்தை திசை திருப்ப அம்னோ கட்சியினர் செய்யும் சதி என்றும் கூறியிருந்தார்.
அவர் வெளியிட்ட கருத்தை எதிர்த்து அம்னோ ஆதரவாளர்கள் பலர் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்தனர்.அதன்படி அவர் மீது தேச நிந்தனை வழக்கு 1948 என்ற சட்டப்பிரிவு 4 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.