கோலாலம்பூர் – கோத்தா டாமன்சாராவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக செய்திகள் வெளியானதால், பல்கலைக்கழகத்தை விட்டு மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இன்று காலை 11 மணி அளவில், பல்கலைக்கழக வளாகத்தில் மர்மமான வகையில் பை ஒன்று வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. அதனைத் தொடர்ந்து பதற்றத்தைத் தவிர்க்க மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
தற்சமயம் பல்கலைகழகத்தை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. எனினும், மர்ம பை பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இது குறித்து பெட்டாலிங் ஜெயா காவல்துறையின் உதவி ஆணையர் முகமட் சைனி சே டின் கூறுகையில், “பல்கலைக்கழகத்திற்கு மர்மமான தொலைபேசி அழைப்பு வந்தது. ஆங்கிலத்தில் பேசிய அந்த நபர், வளாகத்தின் கழிப்பறையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மர்ம பையுடன் சுற்றித் திரிவதாகக் கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.