Home Featured நாடு அரசியல் பார்வை: டிரான்ஸ் பசிபிக் உடன்படிக்கைக்கு எதிரான பேரணி தோல்வியில் முடிந்தது ஏன்?

அரசியல் பார்வை: டிரான்ஸ் பசிபிக் உடன்படிக்கைக்கு எதிரான பேரணி தோல்வியில் முடிந்தது ஏன்?

752
0
SHARE
Ad

Malaysians protest against Trans-Pacific Partnership Agreementகோலாலம்பூர் – வழக்கமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெற்ற பேரணிகள் என்றால் கோலாலம்பூரே கலகலத்துப் போகும் அளவுக்குக் கூட்டம் சேரும். அதிலும் பெர்சே ஆதரவுப் பேரணிகள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.

ஆனால், நேற்று நடைபெற்று முடிந்த டிபிபிஏ எனப்படும் “டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் அக்ரிமெண்ட்” எனப்படும் பசிபிக் வட்டார நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உடன்படிக்கைக்கு எதிரான பேரணி – பெர்சேயின் ஆதரவுடன் நடைபெற்ற நிலையிலும் – தோல்வியில் முடிந்திருக்கின்றது.

60,000 பேர் கலந்து கொள்வார்கள் என பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் பேரணியில் சுமார் 2,000 முதல் 3,500 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பாஸ் முன்னின்று நடத்திய பேரணி என்பதால் இதில் 25,000 பேர் கலந்து கொண்டார்கள் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் தெரிவித்திருக்கின்றார்.

பாடாங் மெர்போக் வளாகத்தில் இந்தப் பேரணி நடத்தப்பட்டாலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமளவில் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டிருந்தார்கள்.

வழக்கமாக, அரசாங்க எதிர்ப்புக் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் மலேசியாகினி இணையப் பத்திரிக்கையே பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை 5,000ஆக கணித்திருக்கின்றது.

டிபிபி எதிர்ப்புப் பேரணி தோல்வி அடைந்தது ஏன்? அதற்கான காரணங்கள் பல உள்ளன.

# 1 – பூமிபுத்ரா உரிமைகள் பறிபோவதால் நடத்தப்படும் பேரணியா?

Malaysians protest against Trans-Pacific Partnership Agreementநேற்றைய பேரணியில் அதிகமான மலாய்க்காரர்கள் கலந்து கொண்டது டிபிபிஏ தொடர்பில் முக்கியமான ஒரு கூற்றை வலியுறுத்தியுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் மலேசியக்  கொள்கைகளின் மைய இழையாகக் கருதப்படும் பூமிபுத்ரா கொள்கை என்பது சிதறி, சின்னாபின்னமாகி விடும் என்ற அச்சம் மலாய்க்காரர்களிடையே பெருகி வருவதுதான் அவர்கள் இந்த உடன்படிக்கையை எதிர்ப்பதற்கான காரணமாகக் கூறப்படுகின்றது.

டிபிபிஏ உடன்படிக்கையில் அமெரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டினாலும், குறிப்பாக பாஸ் கட்சியினர் இந்த பேரணியில் திரண்டு வந்து ஆதரவு வழங்கியிருக்கின்றனர்.

டிபிபிஏ பூமிபுத்ரா கொள்கைகளுக்கு எதிரானது என்ற கருத்து பதிந்து விட்டதால், மலாய்க்காரர்கள் இந்தப் பேரணியில் அதிகமாகக் கலந்து கொண்டார்கள் என்றால்,

அதே காரணங்களுக்காக மற்ற இனத்தவர்களும் – குறிப்பாக சீனர்களும், இந்தியர்களும் – இந்தப் பேரணியில் இருந்து கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டனர்.

# 2 -தைப்பூசம் போன்ற காரணங்களால் – இந்தியர்களை ஈர்க்கவில்லை

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெள்ளிக்கிழமை இரவு முதல் வெள்ளி இரதத்தோடு பத்துமலை நோக்கி நடந்து கொண்டிருக்க, தைப்பூசத்திற்கு முதல் நாளான சனிக்கிழமையே இந்துப் பெருமக்கள் பத்துமலை திருத்தலம் நோக்கி குழுமத் தொடங்க,

அன்றைய தினத்தில் டிபிபிஏ-க்கு எதிரான பேரணி நடத்தப்பட்டதால், இந்தியர்கள் பெருமளவில் இந்தப் பேரணிக்கு ஆதரவும் தரவில்லை – கலந்து கொள்ளவுமில்லை.

# 3 – வணிகம் பெருகும் என்பதால் சீனர்கள் டிபிபிஏ-க்கு ஆதரவு

முன்பு கூறியதுபோல், விவரம் தெரிந்த சீனர்களும், இந்தியர்களும் டிபிபிஏ ஒப்பந்தம் என்பது – மலேசியாவின் புரையோடிப் போன, துருப் பிடித்துப் போன – அம்னோவின் அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே உயிர்வாழும் – பூமிபுத்ரா கொள்கையைக் கட்டம் கட்டமாக சிதைக்கக் கூடியது என நம்புகின்றார்கள்.

TPPA-protests-கோலாலம்பூர், சோகோ வணிக வளாகத்தின் முன்பு திரண்ட டிபிபிஏ எதிர்ப்புப் பேரணியினர்…

குறிப்பாக, சீன வணிகர்கள், டிபிபிஏ மூலம் – குறிப்பாக அமெரிக்காவின் ஈடுபாட்டின் மூலம் – மலேசியாவில் வணிக வாய்ப்புகள் பெருகும் என்றும், அதன் காரணமாக, நலிவடைந்து வரும் மலேசியப் பொருளாதாரம் சீர்பெறும் என்றும் நம்புகிறார்கள்.

இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் என்ன கூறினாலும், சீன வணிகர்களின் குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் ஆதரவு டிபிபிஏ-க்குத்தான் இருக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது. அதனால்தான் இந்தப் பேரணியில் சீனர்களின் பங்களிப்போ, இளைஞர்களின் பங்களிப்போ அதிக அளவில் இல்லை.

சீனர்களைப் பொறுத்தவரை வணிக வாய்ப்புகளுக்குத்தான் முன்னுரிமை தருவார்கள், அரசியல் காரணங்கள் என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்!

எனவேதான், அதிகப்படியான சீன வம்சாவளியினரின் ஆதரவு இந்த முறை டிபிபிஏக்கு எதிரான பேரணிக்குக் கிடைக்கவில்லை.

# 4 – உடைந்து கிடக்கும் பக்காத்தான் கூட்டணி காரணமா?

பேரணியின் தோல்விக்கான மற்றொரு முக்கியக் காரணம், உடைந்து, சிதறிக் கிடக்கும் பக்காத்தான் கூட்டணியின் ஒற்றுமையின்மைதான்.

கடந்த கால பேரணிகளும், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும், பெரும் கூட்டத்தைத் திரட்டியதற்கும், வெற்றியடைந்ததற்கும் முக்கியக் காரணம், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக ஓரணியில் ஒன்றுதிரண்டு கைகோர்த்து நின்றதுதான்!

இப்போது அந்த நிலைமை இல்லை என்பதுதான் – டிபிபிஏ எதிர்ப்புப் பேரணி தோல்வியடைந்ததற்கான மற்றொரு காரணமாகும்.

# 5 – அரசியல் காரணங்கள் இல்லை

TPPA protests-Padang Merbokபேரணிக்கான மைய இடமான பாடாங் மெர்போக்கில் குழுமிய பேரணியினர் – அவர்கள் அணிந்திருந்த ஆடையின் வண்ணத்தைக் கொண்டு பாஸ் கட்சியின் ஆதிக்கம்  பேரணியில் மேலோங்கி இருந்ததை உணரலாம்…

பேரணியின் தோல்விக்கான மற்றொரு காரணம் இதில் போதுமான அரசியல் காரணங்கள் இல்லை என்பதுதான்.

பொதுவாக, பேரணிகளும், எதிர்ப்புப் போராட்டங்களும் வெற்றி பெறுவதற்கு அதன் பின்னணியில் வலுவான அரசியல் காரணங்கள் இருக்க வேண்டும்.

நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை, நியாயமான பொதுத் தேர்தல், அன்வார் இப்ராகிம் சிறைவாசம் – என சாதாரண மக்களையும் சென்றடையும் வண்ணம் சில காரணங்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட கடந்த கால பெர்சே போராட்டங்கள் பெருமளவில் அனைத்து நிலையிலான மலேசியர்களையும் வீதிப் போராட்டத்துக்கு இழுத்து வந்தன.

ஆனால், இந்த முறை அதுபோன்ற வலிமையான அரசியல் காரணங்கள் எதுவுமில்லாத காரணத்தால், டிபிபிஏ எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

எத்தகைய அரசியல் கொள்கைகளுக்காக நடத்தப்பட்டாலும், பொதுமக்களின் ஆர்வமும், உயிரோட்டமான பங்களிப்பும் அதில் இரண்டறக் கலந்திருந்தால்தான் எந்த ஒரு எதிர்ப்புப் போராட்டமும் வெற்றி பெறும் என்பது நேற்றையப் பேரணியின் தோல்வியிலிருந்து புலனாகின்றது.

# 6 – மக்களுக்குப் புரியாத சித்தாத்தங்கள்

டிபிபிஏ என்பது என்ன? அதன் பின்னணி என்ன? அதன் வணிக சித்தாந்தங்கள் என்ன? எதிர்காலத்தில் இந்த உடன்படிக்கையின் பாதிப்புகள் என்னவாக இருக்கும்? உடனடியாக மக்களுக்கு எந்த மாதிரியான நல்ல அம்சங்களை அல்லது மோசமான விளைவுகளைக் கொண்டு வரும்?

– என்பது போன்ற பல கேள்விகளுக்கு நன்கு படித்த மக்களுக்கே இதுவரை விடை தெரியவில்லை.

இதுவும் மக்களின் ஆர்வமும் பங்கெடுப்பும் நேற்றைய டிபிபிஏ எதிர்ப்புப் பேரணிக்குக் குறைந்ததற்கான காரணங்களுள் ஒன்று!

# 7 – நாடாளுமன்ற விவாதம் விரைவில் என்பதால் – மக்களுக்கு ஆர்வமில்லை

Parliamentஎதிர்வரும் ஜனவரி 26ஆம் மற்றும் 27ஆம் தேதி என இரு நாட்களுக்கு சிறப்பு நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, டிபிபிஏ ஒப்பந்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படவிருக்கின்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கும், விவாதங்களுக்குமே உரியதாகக் கருதப்படும் – மிக நுணுக்கமாக ஆராயப் பட வேண்டிய – டிபிபிஏ ஒப்பந்தம் என்பது குறித்த போராட்டம் என்பதால் மக்களுக்கு  பரவலாக இதில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.

ஏன் இந்தப் போராட்டம் – எதற்காக டிபிபிஏ நமக்கு வேண்டாம் – என்ற செய்தி மக்களுக்கு சரியாகச் சென்றடையவில்லை

அதுதான்  நாடாளுமன்றத்தில் பேசப் போகின்றார்களே அதற்குள் நாம் ஏன் போர்க்கொடி தூக்க வேண்டும் என்ற எண்ணமே பொதுமக்களிடம் மேலோங்கி இருந்ததால், நேற்றைய பேரணியில் மக்கள் யாரும் திரளாகக் கலந்து கொள்ளவில்லை.

இப்படியாக மேற்கூடிய பல்வேறு காரணங்களால் டிபிபிஏ எதிர்ப்புப் பேரணி பிசுபிசுத்துப் போனது என்பதோடு, அனைவரும் எதிர்பார்த்த நெருக்குதலை அரசாங்கத்துக்கு தர முடியாமலே நடந்தேறியிருக்கின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக, டிபிபிஏ ஒப்பந்தம் என்பது மலேசியா ஏற்கனவே கையெழுத்திட்டு விட்ட ஒப்பந்தம் என்பதால் போராட்டம் நடத்தினாலும், எதிர்ப்பைக் காட்டினாலும் அதனை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை மக்களிடையே எழவில்லை.

இனி, ஜனவரி 26, 27ஆம் தேதிகளில் நடைபெறும் நாடாளுமன்ற விவாதங்களின் முடிவில், பெரும்பான்மை வாக்குகளில் டிபிபிஏ ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் மறு உறுதி செய்யப்படும்.

அதன் பின்னர், இந்த டிபிபிஏ அமுலுக்கு வந்து விடும் என்பதால், இனியும் அது குறித்த எதிர்ப்பு என்பது நீர்த்துப் போன ஒன்று என்றாகி, அந்த ஒப்பந்தத்தின் பின்விளைவுகள் என்ன என்பதை நோக்கி மக்களின் எண்ணமும், சிந்தனைகளும் திசை திரும்பி விடும்.

-இரா.முத்தரசன்