புது டெல்லி – நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகக் கூறி, பிரபல எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அரசிடம் திரும்பக் கொடுத்து வந்தனர். இந்நிலையில், அரசு மேற்கொண்ட சமரச முயற்சிகளுக்கு எழுத்தாளர்கள் சிலர் ஏற்றுக் கொண்டதால், மீண்டும் விருதுகளைப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்து இருப்பதாக, சாகித்ய அகாடமி தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் எழுத்தாளர் கல்புர்கி படுகொலை, தாத்ரி முதியவர் படுகொலை போன்ற சம்பவங்களைக் கண்டித்து நயன்தாரா சேகல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஒப்படைத்த விருதுகளை திரும்ப பெற்றுக் கொள்வதற்கு எழுத்தாளர்கள் முன்வர வேண்டும் என சாகித்ய அகாடமி அமைப்பு, எழுத்தாளர்களிடம் கேட்டுக் கொண்டது. அக்குழுவின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரியும் நேரடியாக எழுத்தாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு எழுத்தாளர்கள் சமாதானம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே எழுத்தளர் நயன்தாரா சேகலுக்கு விருது அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு எழுத்தாளரான நந்த் பரத்வாஜும் தனது விருதை திரும்பப் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் எனத் தெரிய வருகிறது.