காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி. தமிழக அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்த அவருக்கு, காங்கிரஸ் தமிழகத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் உட்கட்சிப் பூசல் காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு ஆதரவாளர்களும் பொது இடங்களில் மோதிக் கொண்டனர்.
இளங்கோவன் குறித்து கட்சி மேலிடத்திற்கு விஜயாதாரணி சார்பில் தொடர் புகார்களும் அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், இளங்கோவன் மற்றும் விஜயதாரணியை டெல்லிக்கு அழைத்த கட்சி மேலிடம், இருவரிடமும் விசாரணை நடத்தியது.
இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் மேலிடத்தில் கடும் அதிருப்தி அடைந்த விஜயதாரணி, திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி, ”முதல்வரிடம் தொகுதிப் பிரச்னைகள் குறித்துப் பேசினேன். என் பதவி பறிக்கப்பட்டது அநியாயம். இதை கட்சி மேலிடத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். உரிய விளக்கம் கிடைக்காவிட்டால், என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் விஜயதாரணி, அதிமுகவில் இணையும் நோக்கத்துடனேயே ஜெயலலிதாவை சந்தித்து இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.