கோலாலம்பூர் – மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என சட்டத்துறைத் தலைவர் மொகமட் அபாண்டி அலி அறிவித்துள்ளார்.
எம்ஏசிசி அளித்த ஆவணங்களை ஆராய்ந்ததில் தனக்கு அவர்களின் விசாரணையின் மீது திருப்தி ஏற்பட்டுள்ளது என்றும், நஜிப் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு அவருக்கு எதிராக எந்த ஒரு குற்றமும் இல்லை என்றும் அபாண்டி அலி குறிப்பிட்டுள்ளார்.
“விசாரணை அறிக்கைகளை இன்று எம்ஏசிசி-யிடம் வழங்குவேன். அதோடு, 3 விசாரணை அறிக்கைகளை இத்துடன் நிறுத்திவிடும் படியும் அறிவுறுத்தவுள்ளேன்” என்று அபாண்டி அலி இன்று காலை புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் அரசியல் நன்கொடை மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து வந்த 42 மில்லியன் ஆகிவற்றை முன்னிறுத்தி இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அபாண்டி அலி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 2.6 பில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடையில், பயன்படுத்தாத 2.03 பில்லியன் ரிங்கிட்டை சவுதி அரச குடும்பத்திடமே நஜிப் திருப்பியளித்துவிட்டதாகவும் அபாண்டி அலி அறிவித்துள்ளார்.