Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “ஒலா போலா” – மலேசிய காற்பந்தின் வசந்த காலத்தைக் காட்டும் – பார்க்க வேண்டிய...

திரைவிமர்சனம்: “ஒலா போலா” – மலேசிய காற்பந்தின் வசந்த காலத்தைக் காட்டும் – பார்க்க வேண்டிய அற்புதம்!

985
0
SHARE
Ad

OlaBola-Poster-கோலாலம்பூர் – இன்றைக்கு யாரையாவது அழைத்துக் கேளுங்கள் – மலேசியாவுக்கு விளையாடும் காற்பந்து விளையாட்டாளர்கள் ஓரிருவரின் பெயர்களைக் கூறுங்கள் என்று!

யாருக்கும் தெரியாது!

ஆனால், 1970ஆம் – 1980ஆம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று அன்றைய கால கட்டத்தில் இதே கேள்வியை யாரையாவது சாலையில் நிறுத்திக் கேட்டால், வரிசையாக ஒப்பிப்பார்கள். “மொக்தார் டஹாரி, சோ சின் ஆன், கோல் கீப்பர் ஆறுமுகம், சந்தோக் சிங், சந்திரன்” என வரிசையாக சொல்லிக் கொண்டே போவார்கள்.

#TamilSchoolmychoice

1972ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மலேசியக் காற்பந்து குழு தகுதி பெற்று ஜெர்மனி, மூனிக் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டது இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியப்பட வைக்கும் தகவல்.

தொடர்ந்து 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கும் மலேசியக் காற்பந்து குழு தேர்வு பெற்றதும், ஆனால், அந்த மாஸ்கோ ஒலிம்பிக்கை புறக்கணித்த நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் சேர்ந்து கொள்ள, அதனால், அந்தப் போட்டியில் மலேசியக் காற்பந்து குழுவும் பங்கு பெற முடியாமல் போனதும் நாம் கடந்து போன- மறந்துபோன வரலாற்றுக் குறிப்புகள்.

உண்மையான மலேசியப் படம்

Olabolaஅந்த வரலாற்றுக் குறிப்புகளின் பின்னணியில், வெளிவந்திருக்கும் அற்புதமான மலேசியத் திரைப்படம் ‘ஒலா போலா’ (Ola Bola). ஆஸ்ட்ரோ ஷா நிறுவனத்தின் தயாரிப்பில் உண்மையிலேயே மலேசியப் படமாக வெளிவந்திருக்கும் இந்தப் படம், இந்தக் காலத்தில் ஒவ்வொரு மலேசியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படமாகும்.

ஏன் என்பதை, படத்தைப் பார்த்துத்தான் உங்களால் புரிந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு மலேசிய மண்ணின் மணம் கமழ தயாரிக்கப்பட்டுள்ளது இந்தப் படம். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை பல காட்சிகள் உணர்வுபூர்வமாக விவரித்திருக்கின்றன.

குறிப்பாக, நீங்கள் 40 வயதைக் கடந்தவர் என்றால், மலேசியக் காற்பந்து விளையாட்டின் 1980ஆம் ஆண்டுகளின் வசந்தமான கால கட்டத்திற்கு உங்கள் நினைவுகள் இந்தப் படத்தின் மூலம் திரும்பிச் செல்லும்.

மலேசியப் படம் என்றால், உண்மையிலேயே மலேசியப் படம்தான்!

சீனக் குடும்பத்தைக் காட்டும்போது அனைவரும் சீன மொழியிலேயே பேசிக் கொள்ள, தமிழ்க் குடும்பத்தைக் காட்டும் போது, கதாபாத்திரங்கள் அனைத்தும் தமிழிலேயே பேசிக் கொள்கின்றன. மலாய்க் குடும்பம் காட்டப்படும்போது அதேபோல மலாய் மொழியிலேயே உரையாடல்கள். இடையிடையே கதாபாத்திரங்கள் ஆங்கில மொழியிலும் உரையாடுகின்றனர்.

அனைத்து உரையாடல்களுக்கும்  மொழிமாற்றம் திரையில் காட்டப்படுவதால், குழப்பமில்லாமல் அனைவரும் தைரியமாகப் படத்தைப் பார்த்து மகிழலாம்!

கதை – திரைக்கதை

தகவல் ஊடக நிறுவனத்தில் பணி புரியும் மேரியான் (Marianne) என்ற சீனப் பெண்மணிக்கு, மலேசியக் காற்பந்து பின்னணியில் ஒரு ஆவணப் படத்தைத் தயாரிக்கும்படி நிர்வாகியிடமிருந்து கட்டளை வருகின்றது.

எவ்வளவோ, முயற்சி செய்தும் ஆவணப் படத்திற்கு சரியான கதைக்களம் அமையாமல் கஷ்டப்படும் மேரியான், சலித்துப் போய், கூடிய சீக்கிரம் தான் விண்ணப்பித்த வேலை கிடைத்ததும் இலண்டனுக்குப் புறப்பட்டு சென்று விடுவேன் என சக பணியாளரிடம் புலம்புகின்றார்.

அந்த சமயத்தில்தான், ஒரு காலத்தில் மலேசியாவுக்கு விளையாடிய, முன்னாள் காற்பந்து வீரர் ஒருவரின் பேட்டி கிடைக்கின்றது. சீன மொழியிலேயே பேசும் அந்த விளையாட்டாளரின் விவரிப்புகள் மூலம், படம் 1980ஆம் ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பயணப்படுகின்றது.

Olabola 1மலேசியக் காற்பந்து குழுவில் என்ன நடந்தது என்பதை அந்த விளையாட்டாளர் விவரிக்க, மேரியானுக்கும் அற்புதமான கதைக்களம் கிடைக்க, நமக்கும் மறக்க முடியாத ஒரு திரைப்படம் கிடைத்து விடுகின்றது.

தேசிய மலேசியக் காற்பந்து குழுவுக்கு விளையாடும் சாதாரண நிலையிலுள்ள பல இன விளையாட்டாளர்கள் –

அவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் – தேசியக் குழுவுக்காக, நாட்டுக்காக, விளையாட அவர்கள் செய்யும் தியாகங்கள் –

அவர்களுக்குள் விளையாட்டு மைதானத்தில் நிகழும் கருத்து வேறுபாடுகள் – அதைக் களைய அவர்கள் நடத்தும் போராட்டங்கள் –

அவர்களுக்குப் பயிற்சியாளராக வந்து சேரும் ஓர் ஆங்கிலேயர் – அவரது போக்கு புரியாத மலேசிய விளையாட்டாளர்கள் – அதே வேளையில் மலேசியப் பின்னணியைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் ஆங்கிலேயப் பயிற்சியாளர் –

இவர்களுக்கிடையில், மலேசிய வானொலியில் காற்பந்து விளையாட்டுகளுக்கு நேர்முக வர்ணனையாளராக தன் திறமையைக் காட்டத் துடிக்கும் மலாய்க்கார ஆர்டிஎம் பணியாளர் –

இப்படியாக, இந்தக் கதாபாத்திரங்கள் அனைவரையும் சுற்றி அற்புதமாகப் பின்னப்பட்டிருக்கின்றது, திரைக்கதை.

படத்தில் வரும் காற்பந்து விளையாட்டாளர்களைப் பார்த்ததும் நமக்கும் முன்பு கூறியது போல், மொக்தார் டஹாரி, சோ சின் ஆன், கோல் கீப்பர் ஆறுமுகம், சந்தோக் சிங், ஆகியோரின் ஞாபகம் வருகின்றது.

1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளத் தயாராகும் மலேசியக் காற்பந்து குழு, இறுதிப் போட்டியில் தென் கொரியாவைச் சந்திக்க – அதனூடே நடக்கும் மனப் போராட்டங்கள் – இறுதியில் மலேசியா அந்தப் போட்டியில் வென்றதா – மாஸ்கோ சென்றதா? என்பதையெல்லாம் திரையில்தான் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்

படத்தின் சுவாரசியங்கள்

படம் 1980ஆம் ஆண்டுகளில் நடைபெறுவதாகக் காட்டப்படும் காட்சிகளில் இயக்குநர் சியூ கெங் குவான், அணு அணுவாக சிந்தித்தும், உழைத்தும் அந்த கால கட்டத்தையும் அந்தக் கதாபாத்திரங்களையும் நமக்கு அப்படியே காட்ட பெரும் சிரமம் எடுத்திருக்கின்றார்.

படத்தில் முத்து என்ற இந்திய கோல் கீப்பராக வரும் கதாபாத்திரம் (நடித்திருப்பவர் சரண்குமார் மனோகரன்) அப்படியே அச்சு அசலாக மறைந்த கோல் கீப்பர் ஆறுமுகத்தை நினைவுபடுத்துகின்றார் – உருவ அமைப்பிலும், நடிப்பிலும்!

கோல்கீப்பர் முத்துவின் வாழ்க்கைப் பின்னணியும், தேங்காய் இறக்கி, உரிப்பவராக வரும் அவரது தந்தையின் நடிப்பும், அவர்களுக்கிடையில் நிகழும் இறுதிக் காட்சிகளும் மனங்களை நெகிழ வைக்கின்றன.

ஆர்டிஎம் வானொலி அறிவிப்பாளராக ஏம்எம்ஆர் பெருமாள் நடித்திருக்கின்றார்.

ஆர்டிஎம் வானொலியில் நேர்முக வர்ணனையாளராக வருவதற்கு அந்த 1980ஆம் ஆண்டுகளில் உண்மையிலேயே துடித்துக் கொண்டிருந்த ரஹிம் ரசாலி படத்தின் இறுதியில் ஒரு காட்சியில் வந்து போகின்றார்.

படத்தின் இறுதியில் உண்மையான மலேசியக் காற்பந்து வீரர் சோ சின் ஆன் தலை காட்டுகின்றார்.

அந்தக் காலத்து மலேசியக் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மலேசியாவின் இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், கிராமப் புறங்கள், மலேசிய இராணுவத்தின் பயிற்சிகள், அவர்களின் தியாகங்கள் என திரைப்படத்தின் மற்ற சில அம்சங்களும் நம்மை நிச்சயம் கவரும்.

இப்படியாக படம் முழுக்க சுவாரசியங்கள் நிறைந்து கிடக்கின்றன.

இயக்குநர் சியூ கெங் குவான்

Chiu Keng Guan-ola bola-2014ஆம் ஆண்டில் வெளிவந்து மலேசியப் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படமாகக் கருதப்படும் ‘ தெ ஜர்னி’ (The Journey) என்ற சீனப் படத்தை இயக்கிய சியூ கெங் குவான் (படம்) இந்த ‘ஒலா போலா’ படத்தையும் இயக்கியுள்ளார்.

ஜர்னி படத்தின் வசூல் சாதனையை அவரது அடுத்த படமான ஒலா போலா முறியடிக்குமா என்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றது மலேசியத் திரையுலகம்.

நாளை ஜனவரி 28 முதல் மலேசியத் திரையரங்குகளை அலங்கரிக்கப் போகும் ஒலா போலா ஒவ்வொரு மலேசியனும் – குறிப்பாக இந்தியர்களும் – பார்க்க வேண்டிய படம்.

பார்த்தால்….ஓரிரு காட்சிகளிலாவது நீங்கள் மனதைப் பறிகொடுத்து விடுவீர்கள். அல்லது நெகிழ்ந்து விடுவீர்கள். யார் கண்டது? ஓரிரு காட்சிகளில் நீங்கள் கண்ணீர்த் துளிகளைச் சிந்தினாலும் ஆச்சரியப்பட முடியாது!

ஒலா போலா – பார்க்க வேண்டிய மலேசியப் படைப்பு!

-இரா.முத்தரசன்