Home Featured தமிழ் நாடு பத்மஸ்ரீக்கும் பத்மவிபூஷணுக்கும் இடைப்பட்ட காலத்தில் ரஜினி என்னதான் சாதித்தார்?

பத்மஸ்ரீக்கும் பத்மவிபூஷணுக்கும் இடைப்பட்ட காலத்தில் ரஜினி என்னதான் சாதித்தார்?

676
0
SHARE
Ad

arulmozhi-rajiniசென்னை – இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் குறித்த அறிவிப்புகள் வெளியானது முதல் பெரும் ஆச்சரிய அலையை ஏற்படுத்தியது நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதிற்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டது தான். ஒரு துறையில் தன்னிகரற்ற, அசாதாரணமான சேவை புரிந்தவர்களுக்கு தான் பத்மவிபூஷண் விருது வழங்கப்படும்.

அப்படிப் பட்ட விருதுக்கு கமர்சியல் படங்கள் எனப்படும் வர்த்தக இலாபத்தைக் கருத்தில் கொண்ட படங்களில் மட்டும் நடித்து வந்த ரஜினி எப்படி தேர்வானார். இதே துறையில் பல்வேறு சாதனைகளைச் செய்தவர்கள் கவனிக்கப்படவில்லை. இயற்கையைப் பேணிக்காக வேண்டும் என இறுதி மூச்சு வரைப் போராடிய நம்மாழ்வார் போன்றவர்கள் கவனிக்கப்பட வில்லை. அப்படி இருக்க அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என நட்பு ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழக அரசியல் கட்சிகளுக்கு ரஜினி பொதுவானவராக இருப்பதால், கட்சிகளும் இது குறித்து வாய்திறக்க மறுக்கின்றன. இந்நிலையில், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் திராவிடர் கழகப் பிரசார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி மட்டும் முதல் முறையாக ரஜினிக்கான விருது குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அவர் கூறுகையில், “ரஜினிகாந்திற்கு இந்த விருது கொடுத்திருப்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று கூறப்பட்டது. இது சரியான கருத்து அல்ல. கண்டிப்பாக இதில் மாற்றுக் கருத்து உள்ளது. நிறைய பேரிடமும் இருக்கும். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்ற பொதுவிதிக்கு உட்பட்டு நான் சொல்லவில்லை. அதற்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட முறையில் தெளிவாகவே சொல்கிறேன்.”

“இந்த மாதிரியாக அடுத்தடுத்து விருதுகளை வழங்கிக் கொண்டே போகிற அளவுக்கு ரஜினிகாந்த், மக்களுக்கு என்ன செய்தார்? என்று எனக்கு தெரியவில்லை. ரஜினிகாந்தின் நடிப்பாற்றல் பற்றி எனக்கு எந்தக் குறைவான மதிப்பீடும் இல்லை. அவருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். நம் வீடுகளில் இருக்கும் குழந்தைகளும் அவரை ரசித்தவர்கள்தான். நாமும் ரசித்தவர்கள்தான். இதற்கான அங்கீகாரமாக பத்மஸ்ரீ விருது கொடுத்தார்கள். அதன் பின்னர் ரஜினிக்கு பத்ம பூஷண் விருது கொடுக்கப்பட்டது. இந்த பத்மஸ்ரீ விருதுக்கும் பத்மபூஷண் விருதுக்கும் இடைப்பட்ட காலத்தில் ரஜினி அப்படி என்னதான் சாதித்தார் எனத் தெரியவில்லை.”

“பத்மபூஷணுக்கும் தற்போதைய பத்மவிபூஷண் விருதுக்கும் இடைப்பட்ட காலத்தில் திரைத்துறையை மேம்படுத்தவும், தன் நடிப்பாற்றலிலும் அவர் அப்படி என்ன செய்திருக்கார்? என்பதும் தெரியவில்லை. இன்றும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகிற லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் (பாஜக) வேண்டியவர்களாக வேண்டும் என்கிற அரசியல் வியூகத்தை தவிர ரஜினியின் தொண்டு அல்லது திறமையை அளவிட்டு இந்த விருதைக் கொடுத்ததாக பார்க்கவில்லை.”

“அவருக்கு முன்பு கொடுக்கப்பட்ட விருதுக்கும் தற்போது விருது கொடுக்கப்பட்ட காலத்துக்கும் இடையே ஒரு நடிகராக அல்லது அவரது பல்வேறு தொடர்புடைய சாதனை என்ன? என்ற கேள்விக்கு விருது கொடுத்தவர்கள் பதில் சொல்ல வேண்டும்” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.