கோலாலம்பூர் – 2.6 பில்லியன் நன்கொடை பெற்ற விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றமற்றவர் என சட்டத்துறைத் தலைவர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த விவகாரத்தில் சிங்கப்பூர் தலையிட்டு விளக்கமளிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு, 2.03 பில்லியன் ரிங்கிட்டை சவுதி அரச குடும்பத்திடம், நஜிப் திரும்ப செலுத்திவிட்டதாக சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி கூறியிருக்கிறாரே அது எப்படி? எப்போது அது நடந்தது? என்று மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மீதித் தொகையை சிங்கப்பூர் முடக்கி வைத்திருப்பதாக சொல்லப்பட்டது. அப்படியானால், சவுதிக்கு திரும்பி அனுப்பப்பட்ட பணத்தையும், முடக்கம் நீக்கப்பட்டதைப் பற்றியும் சிங்கப்பூர் விளக்கமளிக்குமா?”
“அல்லது இந்த நன்கொடை கதையையும், கடிதத்தையும், சவுதி ஒப்புக் கொண்டதையும் சிங்கப்பூரும் நம்பப்போகின்றதா?”
“சிங்கப்பூர் ஒரு நிதி மையம். அது அவ்வளவு கண்மூடித்தனமாக எதையும் நம்பிவிடுமா?” என மகாதீர் பல கேள்விகளை தனது வலைத்தளத்தில் எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி, ரைட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 1எம்டிபி-ல் நடந்த ஊழல் மற்றும் தவறான நிதி மேலாண்மையில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட இரண்டு வங்கிக் கணக்குகளை சிங்கப்பூர் காவல்துறை முடக்கம் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தது.
“ஜூலை 15, 2015 அன்று, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நாங்கள் வெளியிட்ட உத்தரவின் படி, விசாரணையில் சம்பந்தப்பட்ட இரண்டு வங்கிக் கணக்குகளில் எந்த ஒரு பணப் பரிமாற்றங்களும் நடைபெறத் தடை விதிக்கின்றோம்” என்று சிங்கப்பூர் காவல்தறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
எனினும், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அந்த வங்கிக் கணக்குகளின் முழு விவரங்களை சிங்கப்பூர் காவல்துறை வெளியிடவில்லை.
என்றாலும், அந்த நன்கொடை மத்திய கிழக்கில் இருந்து வந்ததாகவும், 1எம்டிபியில் அது தொடர்புடையது அல்ல என்றும் மலேசிய அதிகாரிகள் கூறி வந்தனர்.
இதனிடையே, நேற்று மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்த பின்னர், சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி வெளியிட்ட அறிக்கையில், சவுதி அரேபியாவில் இருந்து தான் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை வந்தது என்றும், 2013 மே மாதம் பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னர், அந்தத் தொகை சவுதி அரச குடும்பத்திடமே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.