புதுடெல்லி – இந்தியாவில் கடப்பிதழுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பம் செய்தால், கிடைக்க குறைந்தது 3 மாதங்களாவது எடுக்கும். இந்நிலையில், பதிவு செய்த ஒரே வாரத்தில் கடப்பிதழைப் பெறும் வகையில், மத்திய அரசு புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
அதாவது, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, நிரந்தர கணக்கு அட்டை (PAN card) ஆகியவற்றுடன் தம்மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை என்பதற்கான சான்றிதழ் ஆகிய நான்கு ஆவணங்களை சமர்ப்பித்தால் போது, ஒரே வாரத்தில் கடப்பிதழ் கிடைத்துவிடும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று அறிவித்துள்ளார்.
அதேவேளையில், இந்தப் புதிய நடைமுறையில் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக, கடப்பிதழுக்கு விண்ணப்பிக்கும் ஒரு இந்தியக் குடிமகன், கடப்பிதழ் அலுவலகத்தின் நேர்காணல், காவல்துறையின் ஆய்வறிக்கை உள்ளிட்ட பல அலுவல்களைக் கடந்த பிறகே கடப்பிதழ் பெறும் நிலை இருந்து வந்தது.
இதனால், கடப்பிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் குறைந்தது 3 மாதங்கள் காத்திருக்கும் நிலையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.