கோலாலம்பூர் – புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஆணையர் மொகமட் ஹாசிம் அப்துல்லா, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே 2.0-ன் தலைவர் மரியா சின் அப்துல்லாவை சந்திக்க ஏற்பாடுகள் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையராக பதவி ஏற்ற பின்னர், புத்ராஜெயாவில் இன்று முதல் முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஹாசிம், இதற்கு முன்பு பெர்சே 2.0 எழுப்பிய அனைத்து தேர்தல் விவகாரங்கள் குறித்தும் அதனுடன் விவாதம் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் பங்களிப்பு குறித்து விளக்கமளிக்க அனைத்து உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். என்னுடைய அதிகாரிகளுடன் விவாதித்து வருகின்றேன். நாங்கள் மரியாதை நிமித்தமாக அனைவரையும் சந்திப்போம். அனைத்து அரசு சாரா இயக்கங்களையும் சந்திக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அப்போது, அரசு சாரா இயக்கம் என்றால், பெர்சே 2.0 -யும் சந்திப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்க, அதற்கு,”ஆம். அனைத்து அரசு சாரா இயக்கங்களையும் தான்” என்று ஹாசிம் பதிலளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக அதற்கு பதிலளிக்கும் வண்ணம் அறிக்கை வெளியிட்டுள்ள பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லா, எந்த நேரமும் தான் தேர்தல் ஆணையரைச் சந்திக்கத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.