கோலாலம்பூர் – கூட்டரசில் அமைச்சர் பதவி வழங்கினாலும் அதை ஏற்கப் போவதில்லை என்றும், மக்கள் ஆதரவு இருப்பதால் தொடர்ந்து கெடா மந்திரி பெசாராகவே இருக்கப் போவதாகவும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு கெடா ஆயர் ஹீத்தாமில் உள்ள கம்போங் சங்லாங் என்ற இடத்தில் தனது ஆதரவாளர்கள் முன் உரையாற்றிய முக்ரிஸ், தனது முடிவை எண்ணி அச்சமடையப் போவதில்லை என்றும், தான் எப்போதும் உண்மையை மட்டுமே பேச விரும்புவதாகவும் தெரிவித்துள்ளதாக மலாய் நாளேடான உத்துசான் தெரிவித்துள்ளது.
“கெடா மக்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும், ஏன் கூட்டரசு அளவில் உயர் பதவிகள் வந்தாலும் அதை ஏற்கப் போவதில்லை. கெடா மக்கள் எப்போதும் என்னை நம்புகிறார்கள்.” என்று முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.
கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படுவார் என்றும், பதவி விலகும் முக்ரிஸ் மகாதீருக்கு கூட்டரசு அமைச்சர் பதவி வழங்க பிரதமர் நஜிப் திட்டமிட்டிருப்பதாகவும் நேற்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.