எதிர்வரும் ஐனவரி 31ஆம் தேதி, 2016ஆம் ஆண்டுக்கான மஇகா உறுப்பினர் சந்தாவைச் செலுத்துவதற்கான இறுதி நாள் என்பதுதான் மஇகா தலைமையகம் நோக்கி கிளைத் தலைவர்கள் படையெடுத்து வருவதற்கான முக்கியக் காரணம்!
அதே வேளையில், கட்சிக்கு வெளியில் இருந்து வரும் மஇகா கிளைகள் மீண்டும் கட்சிக்குத் திரும்ப மஇகா தலைமையகம் வழங்கியிருக்கும் வாய்ப்புக்கான இறுதி நாளும் ஜனவரி 31ஆம் தேதியோடு முடிவடைகின்றது.
அவர்களின் வருகையும் மஇகா தலைமையகத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டிருப்பதற்கான மற்றொரு காரணம்!
எத்தனை பேர் மீண்டும் கட்சிக்குள் மீண்டும் இணைகின்றார்கள் என்பது ஜனவரி 31க்குப் பிறகுதான் அதிகாரபூர்வமாகத் தெரியவரும்.
இந்த சூழலில்தான் நாளை வெள்ளிக்கிழமை மஇகா மத்திய செயலவைக் கூட்டமும் நண்பகல் 12.30 மணியளவில் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நஜிப்-பழனிவேல் சந்திப்பால் மாற்றம் ஏதும் ஏற்படுமா?
இந்நிலையில்தான் நேற்று நாடாளுமன்றக் கட்டிடத்தில் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவை பிரதமர் நஜிப் சந்தித்தது குறித்து, இன்றைய தமிழ் நாளேடுகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தியாக அதை வெளியிட்டிருக்கின்றன.
அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து மஇகாவில் மறுதேர்தல் என்றும், பழனிவேலுவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி என்றும், இந்த சந்திப்பினால் நடப்பு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் ஆதரவாளர்கள் அதிர்க்குள்ளாகியிருக்கின்றார்கள் என்றும் பத்திரிக்கைகளில் ஆரூடங்கள் பரபரப்பான செய்திகளாக இன்று உலா வந்திருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னால், பினாங்கு தைப்பூசத்தில் பழனிவேலு, ஜசெக தலைவர்களான பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி ஆகியோரோடு சேர்ந்து கலந்து கொண்டதன் காரணமாகத்தான் நஜிப் பழனிவேலுவை சந்தித்திருக்கின்றார் என்றும் பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற விவாதங்கள்தான் சந்திப்புக்குக் காரணமா?
ஆனால், விசாரித்துப் பார்த்ததில், நஜிப்-பழனிவேல் சந்திப்பின் பின்னணிக்கு, மஇகா வட்டாரத்திலும், பழனிவேல் தரப்பிலும் வேறு சில காரணங்களை முன் வைக்கின்றார்கள் விவரம் அறிந்தவர்கள்.
முதலாவது, டிபிபிஏ எனப்படும் பசிபிக் வட்டார நாடுகளுக்கிடையிலான வணிக உடன்பாட்டை நாடு ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது குறித்த விவாதம்!
இரண்டாவது, சரிந்து வரும் எண்ணெய் விலைகள், மாறி வரும் உலகப் பொருளாதார சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பிரதமர் ஏற்கனவே சமர்ப்பித்திருக்கும் 2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், சில குறிப்பிடத்தக்க திருத்தங்களை பிரதமர் நாடாளுமன்றத்தில் முன் மொழியவிருக்கின்றார் என்பது!
இந்த இரண்டு விவகாரங்களிலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் – அதுவும் தேசிய முன்னணி சார்பில் கடந்த 2013இல் கேமரன் மலை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பழனிவேலுவின் நிலைப்பாடு என்ன? –
அதிலும், பினாங்கு தைப்பூச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே, தன்னைச் சந்திக்கும்படி பழனிவேலுவை நஜிப் கேட்டுக் கொண்டார் என்றும், நாடாளுமன்றத்தில் பழனிவேலுவின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நஜிப் அவரை அழைத்தார் என்றும் தெரிவிக்கின்றன அந்த அரசியல் வட்டாரங்கள்.
எனவே, லிம் குவான் எங், இராமசாமி சந்திப்புக்குப் பின்னர்தான், நஜிப் பழனிவேலுவைச் சந்திக்க அழைத்தார் என்ற கூற்றில் உண்மை எதுவும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
அதே நேரத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தினாலோ, மற்ற அரசியல் காரணங்களுக்காகவோ பழனிவேலுவை நஜிப் சந்திக்கவில்லை என்றும் அந்த அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மஇகாவில் மாற்றங்கள் ஏதும் ஏற்படப் போவதில்லை
கட்சிக்கு வெளியே நிற்கும் அனைத்து மஇகா கிளைகளுக்கும் மஇகாவின் வாசல் கதவுகள் ஏற்கனவே திறந்து விடப்பட்டுள்ளதால், யாரையும் கட்சிக்குள் சேர்க்காமல் வெளியில் நிறுத்தி வைத்திருக்கின்றார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் –
இந்நிலையில் நஜிப்-பழனிவேல் சந்திப்பால் மஇகாவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் –
மேற்கூறப்பட்ட நாடாளுமன்ற விவகாரங்களில் பழனிவேலுவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் நஜிப்பின் சந்திப்பு என்றும் குறிப்பிடுகின்றன, மஇகா வட்டாரங்கள்!
பழனிவேல்-லிம் குவான் சந்திப்பு அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்குமா?
காரணம், முதல் கட்டமாக பழனிவேலுவோ அவரது ஆதரவுக் குழுவினரோ, ஜசெக அல்லது பக்காத்தான் கூட்டணியில் இணைய விரும்புவார்களா – என்பது சந்தேகம்தான்.
அப்படியே எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைய பழனிவேல் முடிவெடுத்தாலும் மற்ற தலைவர்களும் அவர் பின்னால் அணிவகுத்து, அவருடனே, எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைவார்களா என்பதும் சந்தேகம்தான்!
இந்திய சமுதாயத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற தலைவராகவோ, மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் பேச்சாற்றலும், பழகும் தன்மையும் கொண்ட தலைவராகவோ, பழனிவேல் பரிணமிக்கவில்லை என்பதால், அவரைச் சேர்த்துக் கொள்வதால் ஜசெகவுக்கோ, பக்காத்தான் கூட்டணிக்கோ அரசியல் ரீதியாக பெரிய இலாபம் எதுவும் இருக்கப் போவதில்லை எனக் கருதப்படுகின்றது.
எடுத்த எடுப்பில் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் ஒருவரை – தேசிய முன்னணி சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தங்கள் பக்கம் இழுத்து வந்து விட்டோம் என்று மட்டும் எதிர்க்கட்சிக் கூட்டணி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால், அதற்குப் பிறகு அதை வைத்து அரசியல் நடத்த முடியுமா? இந்திய வாக்காளர்களை ஈர்க்க முடியுமா என்பது வேறு விஷயம்!
ஆக, நேற்று நஜிப்-பழனிவேல் இடையில் நடந்த சந்திப்பினால், அரசியல் மாற்றங்கள் எதவும் ஏற்பட்டுவிடாது என்றும், குறிப்பாக மஇகாவில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடாது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-இரா.முத்தரசன்