பாரிஸ் – பிரான்ஸ் நாட்டைச் சூழ்ந்துள்ள தீவிரவாதத் தாக்குதல்களின் அபாயம் இன்னும் தீரவில்லை என்பதற்கு உதாரணமாக, நேற்று அந்த நாட்டின் பிரபல கேளிக்கை மையமான டிஸ்னிலேண்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், தீவிரவாதி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவனைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவனிடம் ஹேண்ட் கன் (handguns) எனப்படும் இரண்டு கைத்துப்பாக்கிகள், அதற்கான ரவைகள், ஆகியவற்றோடு புனித குரான் நூலும் இருந்ததாக பிரான்ஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாரிசிலிருந்து சுமார் 30 கிலோமீட்டம் தொலைவில் உள்ள டிஸ்னிலேண்டில் உள்ள நியூயார்க் என்ற பெயர் கொண்ட தங்கும் விடுதியில் அந்த சந்தேக நபர் தங்கியிருந்தான்.
அந்த தங்கும் விடுதியில் துப்பாக்கி போன்ற உலோகப் பொருட்களை அடையாளம் காட்டும் பரிசோதனைக் கருவியைத் தாண்டி அவன் சென்ற போது, எழுந்த ஒலியால் சந்தேகமடைந்த தங்கும் விடுதியின் பாதுகாப்பு அதிகாரிகள், அவனைத் தடுத்து வைத்து பின்னர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவன் உபயோகித்த காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவனது காதலி என நம்பப்படும் பெண்ணையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளில், இதுவரை அந்நபர் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவன் என்பது நிரூபிக்கப்படவில்லை. தனது சொந்த பாதுகாப்புக்காகவே, துப்பாக்கிகளை வைத்திருந்ததாக அந்நபர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளான்.
அவன் பாரிசில் வசிப்பவன் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து தங்களின் கேளிக்கை மையத்தின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக டிஸ்னிலேண்ட் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
டிஸ்னிலேண்டின் பணியாளர்கள், வருகையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புதான் தங்களின் முதல் நோக்கம் – கடமை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.