Home Featured நாடு 2016இல் மஇகா தேர்தல்கள் இல்லை! மத்திய செயலவை முடிவு!

2016இல் மஇகா தேர்தல்கள் இல்லை! மத்திய செயலவை முடிவு!

614
0
SHARE
Ad

Subramaniam-MICகோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் 2016ஆம் ஆண்டுக்கான கட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த ஆண்டுக்கான கட்சித் தேர்தல்கள், பொதுத் தேர்தல்கள் முடியும் வரை ஒத்தி வைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மஇகா சட்டவிதிகளின்படி கட்சித் தேர்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். 2009ஆம் ஆண்டில், முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவின் தலைமைத்துவத்தின் கீழ்  நடைபெற்ற கட்சித் தேர்தல்களுக்குப் பின்னர், அடுத்த தேர்தல் 2012ஆம் ஆண்டில் நடைபெறவிருந்தது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், 2010ஆம் ஆண்டின் இறுதியில் சாமிவேலு தனது தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். கட்சியின் துணைத் தலைவராக அப்போது இருந்த டத்தோஸ்ரீ பழனிவேலு மஇகாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அதைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய தேர்தல்கள் பொதுத் தேர்தலை முன்னிட்டு, ஒத்திவைக்கப்பட்டு 2013ஆம் ஆண்டில் நடைபெற்றன.

ஆனால், பின்னர் 2013இல் நடைபெற்ற கட்சித் தேர்தல்கள் செல்லாது என சங்கப் பதிவகம் முடிவு செய்ததைத் தொடர்ந்து, அதற்கான மறுதேர்தல்கள் கடந்த ஆண்டு 2015இல் நடப்பு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றன.

இந்நிலையில், 2015இல் நடைபெற்ற தேர்தல்கள் 2013ஆம் ஆண்டுக்கான மறு-தேர்தல்கள் என்பதால், சட்டவிதிகளின்படி, மஇகாவின் அடுத்த தேர்தல்கள் 2016ஆம் ஆண்டில் நடைபெற வேண்டும்.

இதனால், இந்த ஆண்டு மீண்டும் தேர்தல்கள் நடைபெறுமா என்ற கேள்விக் குறி மஇகாவினரிடையே உலவி வந்தது.

நேற்றைய மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் 2016ஆம் ஆண்டுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வருகின்றது.

இனி, மஇகா தலைமையகம் இந்தத் தேர்தல் ஒத்தி வைப்பை சங்கப் பதிவகத்திற்கு முறையாகத் தெரிவித்து ஒப்புதலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.