Home Featured தமிழ் நாடு மாணவிகள் பலியான கல்லூரிக்கு திமுக ஆட்சியில் அனுமதி – ஆதாரங்களுடன் அன்புமணி அறிக்கை!

மாணவிகள் பலியான கல்லூரிக்கு திமுக ஆட்சியில் அனுமதி – ஆதாரங்களுடன் அன்புமணி அறிக்கை!

1253
0
SHARE
Ad

Dr. Anbumani vs Stalinசென்னை – 3 மருத்துவ மாணவிகளின் மரணத்திற்கு காரணமாகக் கூறப்படும் எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு திமுக அரசு தான் அனுமதி வழங்கி உள்ளது என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில், சென்னையில் ஓர் அரசு இயற்கை மருத்துவம் (சித்த) மற்றும் யோகா கல்லூரியும், சேலம், கோவை, குலசேகரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் 4 தனியார் இயற்கை மருத்துவம் யோகா கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவற்றில் கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி தவிர மீதமுள்ள 4 கல்லூரிகளுக்கும் 1996-2001 திமுக ஆட்சிக்காலத்திலும், கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியிலும் தான் அனுமதி அளிக்கப்பட்டது.”

“இந்த கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை இடங்கள் எத்தனை? என்பதை தீர்மானிப்பது, இந்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில சுகாதார அமைச்சகத்திடம் உள்ளன. இதற்கும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அப்பாவி மாணவிகள் 3 பேரை பலி கொண்ட கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரிக்கு, நான் அனுமதி அளித்ததாக சிந்திக்கும் திறனற்ற சில தலைவர்கள் கூறுவதையும், அதை சரிபார்க்காமல் கூட சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவதும் முறையா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். இதன் பிறகாவது அவதூறு பரப்பியவர்கள் தங்கள் மனசாட்சியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்”

#TamilSchoolmychoice

“2008-ம் ஆண்டில் எஸ்விஎஸ் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்ட போது தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி தான் நடைபெற்றது. எஸ்விஎஸ் கல்லூரியில் இப்போதே எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை எனும்போது 8 ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயமாக கட்டமைப்பு வசதிகள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படியென்றால், அந்த கல்லூரிக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து அப்போது தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியும், நிழல் முதல்-அமைச்சராக செயல்பட்ட மு.க.ஸ்டாலினும் தான் விளக்க வேண்டும்.”

“எந்தவித கட்டமைப்பு வசதியும் இல்லாத எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு அனுமதி அளித்த முந்தைய தி.மு.க அரசும், அக்கல்லூரிக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வரும் அதிமுக அரசும் தான், 3 மாணவிகளின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும். மோசடி கல்லூரிக்கு துணை போன அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் உடனடியாக வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்” என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்து வருவது வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.