கோலாலம்பூர் – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து தற்கொலைத் தாக்குதல் நடத்தி சாவதற்குத் தயார் நிலையில் 46 மலேசியர்கள் இருப்பதாக மிங்குனான் மலேசியா (Mingguan Malaysia) பத்திரிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
புக்கிட் அம்மான் தீவிரவாத ஒழிப்பு சிறப்புப் பிரிவின் மூத்த துணை ஆணையர் டத்தோ ஆயோப் கான் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் போக ஏற்கனவே 18 மலேசிய ஐஎஸ் போராளிகள் பல்வேறு சண்டைகளில் கொல்லப்பட்டனர். அதில் 7 பேர் தற்கொலைப் படையாகச் செயல்பட்டுள்ளனர் என்றும் புக்கிட் அம்மான் தெரிவித்துள்ளார்.
“சிரியாவிற்கு சென்று சண்டையிட்டு தாங்கள் தியாகியாக இறக்க வேண்டும் என்று மலேசியர்கள் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் சண்டையில் அவர்களுக்கு காயங்கள் மட்டுமே ஏற்படுகின்றது. இதனால், மேலும் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டு முன்வரிசைக்கு வரும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்” என்று ஆயோப் கான் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் தற்கொலைப் படையாகச் செயல்பட நினைக்கும் மலேசியர்கள், தங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருப்பார்கள் என்றும், அதற்கென்றே அங்கு தனி காத்திருப்புப் பட்டியல் உண்டு என்றும் ஆயோப் கான் குறிப்பிட்டுள்ளார்.