கோலாலம்பூர் – இன்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியில் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் நடத்தும் “ஒற்றுமைப் பொங்கல்” நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில், மஇகாவின் சின்னத்தையும் இணைத்திருப்பதால், மஇகாவில் கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் விளம்பரம் இதுதான்….
அதிகாரபூர்வ மஇகா, டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையில், சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வரும் வேளையில், பழனிவேல் தரப்பினரும் இன்னும் தாங்கள்தான் மஇகா என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்துவருவதற்கு எதிர்ப்பு தரும் வகையில் நாடு முழுமையிலும் காவல் துறையில் புகார்கள் செய்யும்படி மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் ஒரு பத்திரிக்கை அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
“பழனிவேல் தற்போது ம.இ.காவின் தேசியத் தலைவர் அல்ல. சட்டப்பூர்வமாக சங்கப் பதிவிலாகாவும் நீதிமன்றமும் டாக்டர் ச.சுப்பிரமணியம்தான் ம.இ.காவின் தேசியத் தலைவர் என அங்கீகரித்துள்ளனர். மேலும், ம.இ.கா கிளைத் தலைவர்கள் மூலமாகவும் தேசியத் தலைவர் பொறுப்பிற்கு அவர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த உண்மையாகும்” என்று மோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“ம.இ.கா தேசியத் தலைவர் பொறுப்பை வகித்த நாளிலிருந்து டாக்டர் சுப்பிரமணியம் கட்சியைப் பலப்படுத்துவதிலும் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தி அவற்றில் வெற்றியும் கண்டு வருகிறார். அவருக்குப் பக்க பலமாக ம.இ.காவின் புதிய மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், டத்தோஸ்ரீ பழனிவேல் தன்னை ம.இ.காவின் தேசியத் தலைவர் என்று கூறுவதும் ம.இ.காவின் பிரதான சின்னத்தைப் பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவதும் நிச்சயமாகத் தடை செய்யப்பட வேண்டும். இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த சங்கப் பதிவிலாகாவும் காவல் துறையினரும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்” எனவும் மோகன் வலியுறுத்தி உள்ளார்.