யாங்கூன் – மியன்மாரில் 50 ஆண்டு கால இராணுவ ஆட்சிக்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியின் முதல் நாடாளுமன்றம் இன்று கூடியது.
(நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பிறகு அவையை விட்டு வெளியே வரும் ஆங் சாங் சூகி /படம்: டுவிட்டர்)
ஆங் சாங் சூகி-யின் ஜனநாயக தேசிய லீக் கட்சி கடந்த நவம்பரில் 80% வாக்குகளுடன் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, இரண்டு மாதங்கள் பலக்கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சுமூகமான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறவுள்ளது.
கடந்த வாரம் மியன்மார் இராணுவத் தலைவர் மின் ஆங் ஹலாயிங்குடன் இரண்டாவது முறையாக ஆட்சி மாற்றம் குறித்து சூகி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமைச்சரவை பொறுப்புகள் சில இன்னும் இராணுவத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சில ஒப்பந்தங்களுடன் ஆட்சி மாற்றம் நடைபெறுகின்றது.
இந்நிலையில், நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று முதல் நாடாளுமன்றம் அவை கூடியது.
நாடாளுமன்றத்தின் முதல் நடவடிக்கையே புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தான்.
அந்நாட்டு அரசியலமைப்பு சட்டப்படி, வெளிநாட்டவரைத் திருமணம் செய்ததால், சூகி தலைவராக முடியாது என்ற நிலையில், நம்பிக்கைக்குரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் மூலமாக ஆட்சி செலுத்துவார் எனக் கூறப்படுகின்றது.