Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: பெங்களூர் நாட்கள் – தமிழுக்கு நல்ல கதை; கதாப்பாத்திரங்களின் தேர்வில் சொதப்பி விட்டது!

திரைவிமர்சனம்: பெங்களூர் நாட்கள் – தமிழுக்கு நல்ல கதை; கதாப்பாத்திரங்களின் தேர்வில் சொதப்பி விட்டது!

943
0
SHARE
Ad

Bangalore-Days-2016-04கோலாலம்பூர் – அஞ்சலி மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்து, அங்கு பெரும் வரவேற்பினைப் பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ என்ற படத்தை, தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள்.

உறவுகளையும், காதலையும் மிக நாகரீகமான முறையில், ரசனையோடு சொல்லும் கதை என்பதால், படம் பார்க்கலாமா வேண்டாமா என்ற சந்தேகமே வேண்டாம். குடும்பத்தோடு ஜாலியாக பார்த்து ரசித்துவிட்டு வரலாம்.

என்றாலும், இந்தத் திரைப்படத்தை கேரள வாசனையிலிருந்து பிரித்து, நம்ம கோயம்பத்தூர் கதையாக மாற்றி, பெங்களூருக்கு எப்படி எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதில் தான் வித்தியாசப்படுகின்றது.

#TamilSchoolmychoice

தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ‘பொம்மரில்லு’ பாஸ்கர் தான் ‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படத்தின் இயக்குநர். தமிழில் மோகன் ராஜா இயக்கிய ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் நிஜ இயக்குநர் தான் இவர்.

கதைச் சுருக்கம்

BDஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா இவர்கள் மூவரும் சொந்தக்காரர்கள். சிறுவயது முதலே ஒருவருக்கொருவர் மிகவும் அன்போடும், உரிமையோடும் வளர்ந்தவர்கள். பாபி சிம்ஹா சாப்ட்வேர் இன்ஜினியருக்குப் படித்துவிட்டு பெங்களூரில் வேலையில் சேர்கிறார். ஸ்ரீதிவ்யாவும் ராணாவை திருமணம் செய்து கொண்டு பெங்களூருக்கு செல்கிறார். இவர்கள் இருவரும் சென்று விட ஆர்யாவும் பெங்களூர் சென்று அங்கு பந்தயத்தில் கலந்து கொள்ளும் மோட்டார்களை பழுது பார்க்கும் தொழிலில் ஈடுபடுகின்றார்.

மூவரும் சிறுவயதில் இருந்ததைப் போலவே பெங்களூரில் ஊரைச் சுற்றி பொழுதைக் கழிக்கிறார்கள். இதனால் ஸ்ரீதிவ்யாவுக்கும், ராணாவிற்கும் மனக்கசப்பு ஏற்படுகின்றது. அப்போது தான் ராணாவின் முந்தைய காதல் கதை தெரியவருகின்றது. இதனிடையே, பாபி சிம்ஹாவுக்கும் லஷ்மி ராய்க்கும் காதல் வருகின்றது. ஆர்யாவுக்கும், பார்வதிக்கும் காதல் வருகின்றது.

இந்நிலையில், அவரவர் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும், காதலும், சுவாரஸ்யங்களும் அதற்கான தீர்வுகளும் தான் மீதிக் கதை.

நடிப்பு

arya-bangalore-naatkal-tamil-movie-latest-still-wallpaperமலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ஒப்பிடுகையில் ஆர்யாவிற்கு அர்ஜுன் கதாப்பாத்திரம் சரியாகப் பொருந்துகிறது. துறுதுறுவென்று சேட்டை செய்யும் இடங்களிலும், பார்வதியுடன் காதலாகி கசிந்துருகும் நேரத்தில் லைக்ஸ் அள்ளுகிறார்.

ஆனால், அந்த அப்பாவி மூஞ்சி, அசடு சிரிப்பில் பாபி சிம்ஹாவை விட மலையாளத்தில் நிவின் பாலி தான் பெஸ்ட். மலையாளத்தில் இந்தப் படத்தைப் பார்க்காதவர்களுக்கு வித்தியாசம் தெரியாது. ஆனால் பார்த்தவர்களுக்கு அந்தக் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலியை மறந்து, பாபி சிம்ஹாவுடன் நீங்கள் பயணமாவதற்குள் இடைவேளை வந்துவிடுகின்றது. நல்ல பையன் கேரக்டரு உங்களுக்கு செட் ஆகலை பாபி.

அதேவேளையில், மலையாளத்தில் நஸ்ரியா நடித்த கதாப்பாத்திரத்தில் தமிழில் ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். ஆனால் நஸ்ரியாவை மறப்பது ரொம்ப கடினம். அந்த கொஞ்சலும், முகபாவணைகளும் கேரளத்துப் பெண்களுக்கே உரியவை.

இவர்களையெல்லாம் தாண்டி ஆர்ஜே சராவாக நம்மை ஈர்ப்பவர் பார்வதி தான். மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி பார்வதிக்கு நிகர் அவரே தான். ப்ளீஸ் தமிழில் தொடர்ந்து நடிங்க பார்வதி..

home-index-image-bangalore-naatkal-19அதோடு, குறைவான காட்சிகளே வந்தாலும் சமந்தா சமத்துப் பொண்ணு. ராய் லஷ்மியின் இருப்பு வண்ணமயம்.

ஆஜானுபாகுவான ராணாவுக்கும், குட்டிப் பெண்ணாக இருக்கும் ஸ்ரீதிவ்யாவிற்கும் இடையே ஜோடிப் பொருத்தமே பார்க்க சகிக்கவில்லை. அதனால் அவர்களுக்கு இடையில் காதல் வரும் காட்சிகளில் கதையுடன் நம்மால் ஒன்ற முடியவில்லை. ஆனால் அதுவே சமந்தாவுடனான காட்சிகளில் ராணா இயல்பாகத் தெரிகின்றார்.

CYRyklzUQAEIPE_இவர்கள் தவிர, பிரகாஷ்ராஜ், சரண்யா பொண்வண்ணன் ஆகிய இருவரும் ரசிக்கும் படியாக தங்களது கதாப்பாத்திரங்களில் மிக அழகாக நடித்திருக்கின்றார். அதிலும், பிரகாஷ்ராஜின் அழுகை இன்னும் காதை விட்டு அகலவில்லை. அற்புதம்.

ஒளிப்பதிவு, இசை

கேவி குகன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அழகு. பாடல் காட்சிகளில் பெங்களூரின் சாலைகளும், கட்டிடங்களும் புதுமை சேர்க்கின்றன.

கோபி சுந்தர் இசையில் மாங்கல்யம் பாடல் உட்பட அனைத்து பாடல்களும் இனிமை. பின்னணி இசையும் ரசிக்கும் இரகம்.

அற்புதமான கதை, விறுவிறுப்பான திரைக்கதையும் கொண்ட இந்தப் படம் இன்னும் எத்தனை மொழிகளில் மறு உருவாக்கம் செய்தாலும் ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், கதாப்பாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகர்கள் மற்றும் முன்பாதி கதை நடக்கும் சூழல், அதன் கலாச்சாரம் மற்றும் பாஷையில் செய்யும் மாற்றத்தில் சிறு கவனக்குறைவு நேர்ந்தாலும் கூட, மலையாளத்தின் ‘பெங்களூர் டேஸ்’ தான் பெஸ்ட் என்று சொல்ல வைத்துவிடும்.

அந்த வகையில், தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ கதாப்பாத்திரங்களின் தேர்வில் சற்று சொதப்பிவிட்டதாகவே தோன்றுகிறது. அதனால் மலையாளம் தந்த ஈர்ப்பு இன்னும் மனதில் தேங்கி நிற்கின்றது.

தமிழில் தான் முதன் முதலாக இந்தக் கதையைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புதுமையாக இருக்கும்.

-ஃபீனிக்ஸ்தாசன்