சென்னை – விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் டீசருக்கு (முன்னோட்டக் காட்சிகள்) எதிராகப் பெரும் சதி நடக்கிறது என்றும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துவிடக்கூடாது என்று சிலர் சதி செய்ததாகவும் அப்படத்தின் இயக்குநர் அட்லியும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் புகார் தெரிவித்துள்ளனர்.
‘தெறி’ படத்தின் டீசர் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது. இத்தருணத்திற்காகவே ஆவலுடன் காத்திருந்த திரை ரசிகர்கள் அதைக் காண முண்டியடித்தனர்.
டீசர் வெளியான அடுத்த 12 மணி நேரத்துக்குள் அதைப் பத்து லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்தனர். எனினும் காப்பிரைட் எனும் உரிமப் பிரச்சினைக்காக அந்த டீசரை யூ டியூப் இணையதளம் திடீரென நீக்கியது. இதனால் ‘தெறி’ படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
எனினும் சிறிது நேரத்திலேயே யூடியூப் இணையதளம் அந்த டீசரை மீண்டும் தனது தளத்தில் அனுமதித்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அட்லி, ‘தெறி’ டீசருக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
“யாரோ சதி செய்து டீசரை முடக்க நினைத்துள்ளனர். அதனால்தான் காப்பிரைட் என பிரச்சினை எழுப்பியுள்ளனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் கண்டுபிடிப்போம்,” என்றார் அட்லி.
தயாரிப்பாளர் தாணு கூறுகையில், “சிலரது சதியை முறியடித்து முன்னோட்டக் காட்சிகளை மீண்டும் யூடியூப் இணையதளத்தில் இடம்பெற செய்துள்ளோம். எனினும் இந்தச் சதியில் ஈடுபட்டவர்களை சும்மா விட மாட்டோம்,” என்றார்.