தைனான் – கடந்த வாரம் சனிக்கிழமை, தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
2 நாட்கள் கடும் போராட்டங்களுக்குப் பிறகு கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதனிடையே, சரிந்து விழுந்த வெய் குவானான் கோல்டன் டிராகன் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த அனைவருமே இறந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
இறந்த 36 பேரில் 34 பேர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தவர்கள் தான். அந்த குடியிருப்பில் வாழ்ந்த இன்னும் 100-க்கணக்கானோரைக் காணவில்லை என்று கூறப்படுகின்றது. அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் புதையுண்டு போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில், அந்தக் கட்டிடத்தைக் கட்டிய கட்டுமான நிறுவனம் மீது காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது. காரணம், அக்கட்டிடத்தில் பல இடங்களில் தகர டப்பாக்களை வைத்துக் கட்டியுள்ளது இடிபாடுகளின் மூலம் அம்பலமாகியுள்ளது.
மேலும், கட்டிடத்தின் தூண்களுக்கு பாலிஸ்தைரின் என்ற பொருள் பயன்படுத்தப்பட்டு அதன் மேல் சிமெண்ட் பூசப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், தைவான் அரசு உடனடியாக அந்தக் கட்டுமான நிறுவனத்திற்கு கைது ஆணை பிறப்பித்துள்ளது.