லங்காவி – போயிங் 737 ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயானி ஏர் நிறுவன விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்த 200 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை காலை லங்காவியில் இருந்து கே.எல்.ஐ.ஏ,-2 விமான நிலையத்திற்கு காலை 11.10 மணிக்கு அந்த விமானம் புறப்பட இருந்தது.
அப்போது கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அந்த விமானம் புறப்பட அனுமதி வழங்கப்படவில்லை. அவை என்ன மாதிரியான தொழில்நுட்பக் கோளாறுகள் என்பது கண்டறியப்படவில்லை என ரயானி ஏர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி கூறுகிறது.
“விமானத்தின் குறிப்பிட்ட சில பாகங்களை மாற்ற இருப்பதாகவும் அதற்காக பொறியியல் பிரிவு காத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரயானி ஏர் வழங்கக்கூடிய ஃபெர்ரி படகு (பயணிகள் படகு) மற்றும் பேருந்து சேவையைப் பயன்படுத்தி கோலாலம்பூர் செல்லலாம் என்றும் அங்கு பயணிகள் செலுத்திய விமானக் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்றும் பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை மாலை 6.20 மணியளவில் புறப்பட இருந்த மற்றொரு ரயானி ஏர் விமானமும் ரத்து செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் லங்காவி விமான நிலையத்தில் காத்துக் கிடக்கும் பயணிகளுக்காக ரயானி ஏர், மாற்று விமானத்தைக் கொண்டு வருவது சரியான நடவடிக்கையாக இருக்கும் என நோர் அஸ்மான் அலி என்ற பயணி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு டிசம்பர் 20ஆம் தேதி முதல் ரயானி ஏர் விமான சேவையை வழங்கி வருகிறது.