கோலாலம்பூர்- பந்தாய் டாலாம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9 பிப்ரவரி) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்குள்ள 9 தரை வீடுகள் தரைமட்டமாகின.
ஜாலான் குபுரிலுள்ள அந்த வீடுகளுடன் சேர்த்து இரு வாகனங்களும் தீக்கிரையானது.
மின் கோளாறு காரணமாகவே தீ மூண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“மதிய வேளையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தகவலறிந்த ஒரு மணி நேரத்துக்குள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம்,” என கூட்டரசுப் பிரதேச தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் உதவிக் கண்காணிப்பாளர் ஹுசைனி மகிடின் தெரிவித்தார்.
தீ விபத்தில் தனது வீட்டைப் பறிகொடுத்துள்ள ஒப்பந்ததாரர் முகமட் டின் அசிஸ் (48 வயது) கூறுகையில், தனது குடும்பத்தாருடன் சில துணிமணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாவும் தங்கள் கண் முன்னே வீடு தீக்கிரையானதாகவும் கூறினார்.
“சம்பவம் நிகழ்ந்தபோது வீட்டுக் கூரையின் ஒரு பகுதி ஒழுகுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரிசெய்வதற்கான பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது வீட்டின் பின் பகுதியில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதைக் கண்டேன்.”
“உடனே என் மனைவி, இரு பிள்ளைகள், மனைவியின் சகோதரி ஆகியோருக்கு தெரிவித்து அவர்களை வெளியேற்ற முடிந்தது. எனினும் வீடு தீக்கிரையாவதற்கு முன்னர் சில துணிமணிகளையும் முக்கிய ஆவணங்களையும் மட்டுமே என்னால் வெளியே எடுத்து வர முடிந்தது” என்று முகமட் அசிஸ் சோகத்துடன் குறிப்பிட்டார்.
இவர் பந்தாய் தலம் பகுதியில் கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
படம்: நன்றி (The Star)