கோலாலம்பூர் – ஜி2ஜி (அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு) ஒப்பந்தத்தின் படி, தனியார் நிறுவனங்கள் மூலமாக மலேசியாவிற்கு 1.5 மில்லியன் தொழிலாளர்களை அனுப்ப வங்காள தேச அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மலேசிய அரசாங்கத்துடன் செய்யவுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்காள தேசம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அடுத்த மூன்றாண்டுகளில் 1.5 மில்லியன் வங்க தேசத் தொழிலாளர்கள் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள் என நேற்று முன்தினம் திங்கட்கிழமை அந்நாட்டு அமைச்சரவை செயலாளர் மொகமட் சைபுல் ஆலம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் தொழிலாளர்கள் தலா 1,985 ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டும், அதை அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களே செலுத்திவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் இம்மாதம் கையெழுத்தாகிவிடும் என்றும் கூறப்படுகின்றது.
இந்தப் புதிய ஒப்பந்தம் சிறப்பாக அமையும் பட்சத்தில், வங்காள தேசம் ஒரு ‘மூலதனம் உள்ள நாடு’ என்ற அங்கீகாரம் பெற்று விடும் என்றும், இதற்கு முன்பு மலேசியாவில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இனி சேவை, உற்பத்தி, கட்டுமானம் ஆகிய துறைகளில் கோலோச்சுவார்கள் என்றும் அந்நாட்டு அமைச்சரவை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புதிய ஒப்பந்தத்தின் படி வங்காள தேசத்தைச் சேர்ந்த பெண்களும் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்கள்.
வங்காள தேச பிரதமர் ஷேக் ஹாசினா தலைமையில் நடந்த வழக்கமான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மலேசியாவில் தற்போது 600,000 வங்க தேசத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: The Daily Star/Asia News Network