வேலூர் – வேலூரில் தனியார் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் விண்கல் விழுந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த செய்தி உலகமெங்கும் பரவியுள்ள நிலையில், நாசா விஞ்ஞானி அச்சம்பவத்தை நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளை மறுத்துள்ளார்.
இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அதன் புகைப்படங்களைப் பார்க்கும் போது அவை விண்ணிலிருந்து விழுந்த மர்மப் பொருளால் நடந்த வெடிப்பு என்பதைக் காட்டிலும், தரையிலேயே வெடித்த பொருளாகவே தெரிவதாகக் கூறியுள்ளார்.
விண்கல் விழுந்து ஒருவர் மரணிப்பது என்பது உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று, அறிவியல் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை என்று நாசாவைச் சேர்ந்த கோள்கள் தற்காப்பு அதிகாரி லிண்ட்லி ஜான்சன் மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ரஷியாவில் நடந்த விண்கல் பாதிப்பை சுட்டிக் காட்டும் அவர், காயங்கள் ஏற்பட்டது கூட அதுவே முதல் முறை, அதற்கு முன்பு அது கூட இல்லை என்கிறார்.