கோலாலம்பூர் – சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் சுமார் 400,000 வங்கதேசத் தொழிலாளர்களுக்கு, சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் மலேசிய அரசாங்கத்தின் முடிவை எண்ணி தாங்கள் பெருமகிழ்ச்சி அடைவதாக, த டெய்லி ஸ்டார் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது.
ஜி2ஜி திட்டத்தின் படி, வங்கதேசத்திலிருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் மலேசியாவிற்குக் கொண்டு வரும் திட்டத்திற்கு எதிராக எழுந்த விமர்சனங்களை அடுத்த அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அது வங்காள தேசத்திற்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டிற்குள் இந்தத் திட்டம் மலேசியாவில் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்றும், மலேசியாவில் முறையான அனுமதியின்றித் தவிக்கும் வங்கதேசத் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி தங்களது பணியை முறைபடுத்திக் கொள்ளும்படியும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலமாக, முறையான ஆவணங்கள் இல்லாமல் கடும் உழைப்பைக் கொடுத்து, மிகக் குறைவான சம்பளம் பெற்று வரும் எத்தனையோ தொழிலாளர்கள், நிறுவனங்களிடம் தங்களது உரிமையையும், முறையான ஊதியத்தையும் பெற முடியும் என்றும் அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
தகவல்: த ஸ்டார்