சென்னை – காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையிலான கூட்டணி குறித்து கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி கடுமையாகச் சாடியிருப்பதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியில் மீண்டும் குடும்ப அரசியல் போராட்டம் தலைதூக்கியுள்ளது.
காங்கிரசுக்கும்-திமுகவுக்கும் இடையிலான கூட்டணி குறித்த செய்திகளும் படங்களும் வெளிவந்தபோது, ஓர் அம்சம் மட்டும் பளிச்செனத் தெரிந்தது. திமுகவைப் பொறுத்தவரை இது ஏதோ ஒரு குடும்பக் கூட்டணிபோல் இது தென்பட்டது.
காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத், தமிழகத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் சில தலைவர்கள் கலந்து கொள்ள, திமுக சார்பிலோ கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகள் கனிமொழி ஆகிய மூவர் மட்டும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
எத்தனை பாரம்பரியம் மிக்க கட்சி திமுக? எத்தனையோ பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்ட தலைவர்களை ஒரே நேரத்தில் கொண்டிருந்த கட்சியல்லவா அது?
ஆனால் இப்போதோ, ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களின் கரங்களில் அந்தக் கட்சி சிக்கிக் கொண்டிருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
கட்சிகளின் கூட்டணியா? அல்லது ஒரு குடும்பத்தின் கூட்டணியா?
அழகிரியின் எதிர்ப்பு
அதற்கேற்ப, அடுத்த அம்பு பறந்து வந்துள்ளது இன்று அழகிரியிடமிருந்து!
காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “திமுக-காங்கிரஸ் இரண்டிற்குமே கொள்கை இல்லை. காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தோம், அமைச்சரவையில் இருந்தோம், அதன் பிறகு காங்கிரசை விட்டு விலகினோம், திமுகவும் விலகியது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை திமுகவினர் நன்றி கெட்டவர்கள் என்றனர். நன்றி கெட்டவர்கள் என்று கூறிவிட்டு பிறகு கனிமொழி எம்.பி. பதவிக்காகச் சென்று பிச்சை எடுத்தார்கள். இப்போது மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி என்கிறார்கள்” எனக் கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கின்றார் அழகிரி.
“ இரண்டு கட்சிகளுக்குமே கொள்கையே இல்லை என்கிறேன். வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து” என்றும் மு.க.அழகிரி கூறியுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி அமைத்துள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அவரது குடும்பத்திலிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது அந்தக் கூட்டணிக்கான முதல் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.