சென்னை – நேற்று காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட்டதாக அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்தக் கூட்டணி பலமா? பலவீனமா? என்ற விவாதங்கள் தமிழகத்தின் செய்தித் தொலைக்காட்சிகளில் அரங்கேறத் தொடங்கி விட்டன.
ஜெயலலிதா சார்பு ஜெயா தொலைக்காட்சியும், அதிமுக சார்பு ஊடகங்களும் இந்த கூட்டணி அறிவிப்பை முறியடிக்கும் வண்ணம் செய்திகளை ஒளிபரப்பத் தொடங்கின.
இரண்டு எதிர்மறையான அம்சங்களால் இந்தக் கூட்டணி பலவீனமாகப் பார்க்கப்படுகின்றது என்பதோடு கடுமையான எதிர்மறை பிரச்சாரங்களையும் சந்திக்கப் போகின்றது.
2ஜி ஊழல் – இலங்கைத் தமிழர் பிரச்சனை என இருமுனைகளில் பலவீனம்
இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் இன்னும் நீறுபூத்த நெருப்பாக, தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும், தமிழ் உணர்வு மிக்கவர்களின் மனங்களிலும் ஊடுருவிக் கிடக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை!
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இலட்சக்கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு காங்கிரசும், திமுகவும் முக்கியக் காரணம் – அந்த இரு அரசியல் அமைப்புகளும்தான் மீண்டும் கைகோர்த்துள்ளன என்ற ஒரு குற்றச்சாட்டை மீண்டும் இந்த தேர்தலில் எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன இந்த இரு கட்சிகளும்!
கூட்டணி அமைந்ததை அறிவிக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்….
அடுத்ததாக, நாடும், மக்களும் இன்னும் மறக்காத – நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் – 2ஜி ஊழலில், இந்த இரண்டு கட்சிகளும்தான் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதால் அவை மீண்டும் இணைந்திருப்பது ஆச்சரியமல்ல என்ற பிரச்சாரங்கள் இப்போதே முடுக்கி விடப்பட்டுள்ளன.
2ஜி ஊழலில் இருந்து தப்பிக்க – தங்களின் சொந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட – ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள – இந்த இரண்டு கட்சிகளும், கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றன என்பதே மக்கள் மனங்களில் தற்போது பதிந்திருக்கும் எண்ணம்!
கரங்கள் இணைந்தன-வாக்குகள் கிடைக்குமா?
இந்தப் பிரச்சனைகளை முன்வைத்து அதிமுகவினர் உற்சாகத்துடன் – முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஒருபுறமிருக்க –
காங்கிரசுக்கும், திமுகவுக்கும் எதிராக எப்போதும் மீசை முறுக்கிக் கொண்டு நிற்கும், வைகோவுக்கோ, ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்துவிட்டது. இனி இந்தக் கூட்டணிக்கு எதிரான அவரது எதிர்ப்பு முழக்கங்களை அடிக்கடி கேட்கலாம்.
எனவே, காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு எதிராக எழப்போகும் இந்த எதிர்ப்பு அலைப் பிரச்சாரங்களுக்கு பதில் சொல்வதற்கே இந்தக் கூட்டணிக்கு இனி நேரம் சரியாக இருக்கப் போகின்றது!
அப்புறம் எப்படி – என்ன சொல்லி – வாக்காளர்களைக் கவரப் போகின்றது இந்தக் கூட்டணி?
விஜய்காந்துக்கு இனி இக்கட்டான சூழல்
எனவே, காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைந்ததால், வெகு சுலபமாக அதிமுகவுக்கு பிரச்சார பீரங்கிகளை முழக்குவதற்கு வெடிமருந்துகள் கிடைத்து விட்டன.
அதோடு, இந்தக் கூட்டணி அறிவிப்பு – விஜயகாந்தை, சுவரின் மூலையில் கொண்டு சென்று நிறுத்தி விட்டதுபோல் ஓர் இக்கட்டான சூழலைஅவருக்கு ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்தும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர். தனது மகனுக்கு பிரபாகரன் என்றே பெயர் சூட்டியவர்.
எனவே, காங்கிரசுடன் அவரும் கூட்டணியில் இணைந்தால் – அவரது கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்படும். கூட்டணிக்கு தலைமை திமுகதான் எனக் கூறப்பட்டு விட்டதால், அப்படியே கூட்டணியில் இணைந்தாலும், விஜயகாந்துக்கு முக்கியத்துவம் எதுவும் கிடைக்காது.
காங்கிரஸ்-திமுக கூட்டணி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி விஜயகாந்த் தனியாக முன்பு போல் ‘கெத்து’ காட்ட முடியாது. மூன்றாவதாக, இந்தக் கூட்டணியில் சேர்ந்துகொள்ள வேண்டிய அவலநிலை இனி விஜயகாந்துக்கு!
எனவே, அவரும் இந்தக் கூட்டணியில் இணையாமல், பாஜகவுடன் இணைவதற்கு, இனி அவர் முயற்சி செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, தனக்கு எதிராகத் திரள நினைத்த அரசியல் சக்திகள் பிரிந்து கிடப்பதாலும் – அவ்வாறு பிரித்து வைக்க சாமர்த்தியமாக பின்னணியில் சாதுரியமாகச் செயல்பட்ட விதத்திலும் –
ஜெயலலிதாவுக்கு ஒருபுறம் வெற்றி என்றுதான் கூறவேண்டும்!
இன்னொரு புறத்திலோ –
2ஜி ஊழல் – இலங்கைத் தமிழர்களுக்கு எதிர்ப்பான இரண்டு சக்திகள் – போன்ற அம்சங்களால் எதிர்மறை பிரச்சாரங்களைச் சந்திக்கப் போகும் கூட்டணி என்பதால் –
திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தது – ஜெயலலிதாவுக்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல் கட்ட வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது!
- -இரா.முத்தரசன்