கோலாலம்பூர் – மலேசிய காற்பந்து விளையாட்டுப் போட்டிகள் மக்களிடையே மிக உயர்வாகப் பார்க்கப்பட்ட அந்த பழைய நாட்களை, ‘ஒலாபோலா’ திரைப்படத்தைப் பார்த்த பின்பு, மீண்டும் நினைபடுத்திப் பார்த்துள்ளார் சிஐஎம்பி குழுமத்தின் தலைவரான டத்தோஸ்ரீ நசிர் ரசாக்.
சோகமாக, ஊழலும், இனவாதமும் மலேசிய காற்பந்து விளையாட்டை சீர்குலைத்து, தேசத்தின் ஒற்றுமையைப் பாழாக்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1970 -களில் மலேசிய காற்பந்து குழுவினரிடையே இருந்த ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் படமான ‘ஒலா போலா’ (இயக்கம் – சியூ கெங் குவான்) அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அப்படத்தைப் பார்த்துவிட்டு நசிர் ரசாக் இன்று வெளியிட்டுள்ள இண்டாகிராம் பதிவில்,
“இப்போது தான் பார்த்தேன். மிகவும் ரசித்தேன்! பெருமைவாய்ந்த அந்த இரவுகளில் மெர்டேக்கா அரங்கில் இருந்த நாட்களை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். மிக முக்கியமாக, சிறந்த மலேசியாவிற்குத் திரும்ப இது ஒரு சக்திவாய்ந்த நினைவுறுத்தலாக இருக்கிறது. நமது காற்பந்து விளையாட்டை ஊழல் சிதைத்துவிட்டது. நமது நாட்டின் ஒற்றுமையை ஊழலும், இனவாதமும் கீழே தள்ளிவிட்டது. அதை உணர்ந்து மிகவும் வருந்துகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், நாட்டில் நிலவி வரும் பல விதமான ஊழல்கள் குறித்து அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருபவர்களில் பிரதமர் நஜிப்பின் சகோதரரான நசிர் ரசாக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.