சென்னை – தமாகா தலைவர் ஜி.கே.வாசனும், மதிமுக பொதுச்செயலர் வைகோவும் சென்னையில் இரு தினங்களுக்கு முன் ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து வைகோ ஒருங்கிணைப்பாளராக உள்ள மக்கள் நலக்கூட்டணியில் தமாகாவும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த முறை அதிமுக கூட்டணியில் தமாகா (தமிழ் மாநில காங்கிரஸ்) இடம்பெறும் என பரவலாகப் பேசப்பட்டது. இத்தகைய பேச்சுக்களை உறுதி செய்யும் வகையில் தமாகா தலைவர் வாசன் உட்பட அக்கட்சியின் அடுத்த நிலை தலைவர்களும் தமிழக அரசு குறித்து விமர்சிப்பதை தவிர்த்தே வந்தனர்.
எனினும் அதிமுக தரப்புடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய தமாகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குறைந்த பட்சம் 20 தொகுதிகளை எதிர்பார்த்த தமாகாவுக்கு ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகளை ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஜி.கே.வாசன் கடும் அதிருப்தியில் இருப்பதை அறிந்த வைகோ, உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது மக்கள் நலக் கூட்டணியில் சேருமாறு அழைப்பு விடுத்ததாகவும் தெரிகிறது.
இதன் பின்னர் வாசனை, சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார் வைகோ.
இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும் தமாகாவுக்கு 50 தொகுதிகள் வரை ஒதுக்க மக்கள் நலக் கூட்டணி தயாராக இருப்பதாக வைகோ உறுதி அளித்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இடம்பெறுமா? என்பது இரண்டொரு நாட்களில் தெரிய வரும்.