கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது மகளுக்கு நடத்தி வைத்த திருமணம் போல், அரசர்கள் கூட நடத்தியிருக்கமாட்டார்கள் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
வலைப்பதிவாளர் டின் டர்டில் யூடியூபில் மகாதீரின் நேர்காணலை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில், “அந்தத் திருமணம் தனிச்சிறப்புடையது. ராஜாக்கள் கூட அது போல் திருமணம் நடத்தியிருக்கமாட்டார்கள்”
“பூக்களுக்கு மட்டும் 3 மில்லியன் ரிங்கிட். அந்த இடமே பூக்களால் நிறைந்திருந்தது” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி நஜிப்பின் மகள் நூர்யானா நாஜ்வா, மருமகன் டனியார் கெசிபாயேவ் ஆகியோரது திருமண வரவேற்பு கேஎல்சிசி-யில் நடைபெற்றதை சுட்டிக் காட்டும் மகாதீர், தான் அதில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அங்கு செய்யப்பட்டிருந்த வீண் செலவுகள் குறித்து கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“படங்கள் இருக்கின்றன (கசிந்த புகைப்படங்கள்). அங்கு வந்தவர்கள் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்கள்”
“அவர்களது வாழ்க்கைமுறை பற்றி மக்களுக்குத் தெரிய வந்துவிடுமோ என்ற அச்சம் தான். நஜிப் செலவழித்துள்ளது உண்மையில் மிகப் பெரியது”
“அவர் விமானத்திலேயே வலம் வருகிறார். அதனால் அவரது மனைவியும், இவையெல்லாம் ஒரு பிரதமருக்கான வாழ்க்கை முறையே அல்ல” என்று மகாதீர் கூறியுள்ளார்.
கேஎல்சிசி-யில் நடைபெற்ற நூர்யானாவின் திருமண வரவேற்பில் எந்த ஒரு பொதுப் பணமும் செலவழிக்கப்படவில்லை என்றும், செலவு செய்யப்பட்ட தொகை அனைத்தும் டேனியர் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் ரோஸ்மாவின் சிறப்பு அதிகாரி முன்பு தெரிவித்திருந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த நூர்யானா – டேனியர் திருமண நிச்சயதார்த்தத்தில் தான் கலந்து கொண்டு அங்கு செய்யப்பட்டிருந்த வீண் செலுவுகளை தனிப்பட்ட முறையில் கண்டதாகக் கூறும் மகாதீர் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
“நான் அந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்விற்குச் சென்றிருந்தேன். அதிர்ச்சியடைந்துவிட்டேன். 16 பீப்பாய்களை இரண்டு வீரர்கள் எடுத்து வந்தார்கள்”
“கடிகாரங்கள், காலணிகள், துணிகள் இவையெல்லாம் இருந்தன”
“அது போன்ற பொருட்களையெல்லாம் வாங்க அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது” என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.