நேற்று இரவு கோலாலம்பூரிலுள்ள சோகோ வணிக வளாகத்தின் முன், தனது பாட்டு நிகழ்ச்சிக்காக அவர் தனது மனைவியுடன் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த நேபாள நாட்டவர் ஒருவர் திடீரென தனது மனைவியைப் பின்புறமாகக் கட்டித்தழுவியதாக முஸ்தாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ப்ரீ மலேசியா டுடே இணையதளத்திடம் கூறுகையில், “அவரது (தனது மனைவியின்) இடையிலும், மார்பிலும் அவன் கையை வைத்திருந்தான். நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அது எனது மனைவியின் தோழிகளில் யாராவதோ என்று முதலில் நினைத்தேன் ஆனால் அது ஒரு நேபாள நாட்டவர் என்பது பின்னர் தான் தெரியவந்தது” என்று முஸ்தாம் தெரிவித்துள்ளார்.
முஸ்தாம் திருமணம் செய்து 5 நாட்களே ஆகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், அந்நபரின் செயலால் கடும் ஆத்திரமடைந்த முஸ்தாம், அவர் மயங்கி சரிந்து விழும் வரை அடித்து, உதைத்துள்ளார்.
“எனக்குத் தெரியும் நான் செய்தது தவறு தான். ஆனால் என்னால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் மயங்கி சரியும் வரை உதைத்தேன். பின்னர், அவனது முகத்திலிருந்து இரத்தம் வடிவதைக் கவனித்தேன். அவன் இறந்து விட்டானோ என்று கவலையடைந்துள்ளேன்” என்று முஸ்தாம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அங்கு வந்த காவல்துறையினர், நிலைமையை அமைதிபடுத்தி, அந்நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் முஸ்தாம் தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசியாவில் பொது இடத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் அளவிற்கு வெளிநாட்டவர்களுக்கு துணிச்சல் வந்துவிட்டதை எண்ணி தான் மிகவும் ஆச்சர்யமடைவதாகவும் முஸ்தாம் தெரிவித்துள்ளார்.
இங்கிருக்கும் வெளிநாட்டவர்களாலேயே பொதுமக்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, புதிதாக வங்கதேசத்தில் இருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை அழைத்து வரும் அரசாங்கத்தின் திட்டத்தையும் முஸ்தாம் விமர்சித்துள்ளார்.