சிட்னி – அல்தான் துயா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் கமான்டோவான சைருல் அசார் ஓமாருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய அரசு அதிகரித்துள்ளது.
தற்போது அவரைக் காண வரும் பார்வையாளர்கள் அனைவருமே ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
சைருலுக்கு (படம்) மலேசியாவின் சில தரப்புகள் மூலம் ஏதேனும் குந்தகம் அல்லது மிரட்டல்கள் வரலாம் என கருதப்படுவதாலேயே, பாதுகாப்பு அம்ச விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் சைருலுக்கு இத்தகைய சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்படுவதாகத் தெரிகிறது.
இறப்பதற்கு முன் அல்தான் துயா கர்ப்பமாக இருந்தார் என்பது உட்பட இந்த வழக்கு தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டுகளை சைருல் மறுப்பது போன்ற பல்வேறு காணொளிப் பதிவுகள் கடந்த சில வாரங்களாக வெளியாகின.
இந்நிலையில் சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய குடிநுழைவு தடுப்பு மையத்திற்கு சைருல் வந்து சேருவதற்கு முன்பே அக்காணொளிப் பதிவுகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தாங்கள் நம்புவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அல்தான் துயா கொலை வழக்கில் சைருலுக்கு மரண தண்டனை வழங்கி கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனினும் அச்சமயம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றார் சைருல்.
இதையடுத்து இன்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல் துறையின் மூலம் அவருக்கு எதிராக சிவப்பு வண்ண எச்சரிக்கை பிறப்பித்ததையடுத்து ஆஸ்திரேலிய குடிநுழைவு அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அவரை தடுத்து வைத்தனர்.