கோலாலம்பூர் – ஆகக் கடைசியாக மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கையை முடக்கியிருப்பதன் மூலம், மலேசியா, வடகொரியாவைப் போல் மாறிவருகின்றது என மகாதீர் கடுமையாகச் சாடியுள்ளார்.
மக்களிடம் உண்மைகள் சென்று சேராமல் இருப்பதற்கு, அந்தத் தகவல்களை பிரதமர் நஜிப் துன் ரசாக் தடுத்து நிறுத்துகின்றார் – காரணம் அரசாங்கம் உண்மையைக் கண்டு பயப்படுகின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.
இன்று வெள்ளிக்கிழமை, கோலாலம்பூரில், கேஎல்சிசி வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோதே மகாதீர் இவ்வாறு கூறினார்.
“தகவல் ஊடகங்கள் நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை மக்களிடம் தெரிவிப்பதற்கு புத்ரா ஜெயா தடை செய்கின்றது. இதே போன்றுதான் வட கொரியாவிலும் நடக்கின்றது. நாமும் அந்தத் திசையில்தான் சென்று கொண்டிருக்கின்றோம்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார் மகாதீர்.
“அரசாங்கம் மக்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை மட்டும் அவர்களுக்குத் தெரிவித்தால் போதும் என நினைக்கின்றது. அதனால் தகவல்களைக் கட்டுப்படுத்த நினைக்கின்றது. ஆனால், அவர்கள் மக்களுக்கு சொல்வதெல்லாம் நிறைய பொய்களை உள்ளடக்கியிருக்கின்றது” என்றும் மகாதீர் கூறினார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மூலம், நஜிப்புக்கு எதிராக நீங்கள் எதைப் பேசினாலும், செய்தாலும், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், போலீசாரால் தடுத்து வைக்கப்படுவீர்கள் அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவீர்கள் என்ற அச்சத்தை அரசாங்கம் மக்களிடையே தோற்றுவித்திருக்கின்றது என்றும் மகாதீர் மேலும் தெரிவித்தார்.