சூரிக் (சுவிட்சர்லாந்து) – இங்கு நேற்று நடைபெற்ற பிஃபா ( FIFA) எனப்படும் அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தில் தலைவராக சுவிட்சர்லாந்து நாட்டின் கியான்னி இன்பாண்டினோ (படம் – Gianni Infantino) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பதவி விலக்கப்பட்ட முன்னாள் தலைவரான ஜோசப் பிளேட்டர் இனி ஆறு ஆண்டுகளுக்கு காற்பந்து தொடர்பான விவகாரங்களில் ஈடுபடுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார். 18 ஆண்டுகள் அசைக்க முடியாத தலைவராக இருந்த பிளேட்டரும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்தான்.
நேற்று சூரிக் நகரில் நடைபெற்ற அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தின் கூட்டம்…
அனைத்துலகக் காற்பந்து சம்மேளனத்தின் ஊழல் விவகாரங்களை அமெரிக்க, சுவிட்சர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இன்பாண்டினோ.
தலைவரின் அதிகாரங்களைக் குறைப்பது உட்பட பல்வேறு சீர்திருத்தங்களை பிஃபா அறிமுகப்படுத்திய பின்னர் நடைபெற்ற தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இன்பாண்டினோ ஐரோப்பிய காற்பந்து சம்மேளனத்தில் பொதுச் செயலாளருமாவார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஹ்ரேன் நாட்டின் ஷேக் சல்மான் பின் எப்ராகிம் அல் கலிஃபாவை விட 88 வாக்குகள் கூடுதலாகப் பெற்று இன்பாண்டினோ வெற்றி பெற்றுள்ளார்.
2019 வரை பதவி வகிக்கப் போகும் இன்பாண்டினோவின் தேர்வின் மூலம் ஊழல் புரையோடிக் கிடக்கும் அனைத்துலகக் காற்பந்து சம்மேளனத்தின் நன்மதிப்பும், கௌரவமும் மீண்டும் நிலைநாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று சூரிக் நகரில் நடைபெற்ற அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தின் கூட்டத்தில் உரையாற்றும் புதிய தலைவர் கியான்னி இன்பாண்டினோ