Home Featured நாடு 18ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளங் குழந்தை பலி

18ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளங் குழந்தை பலி

485
0
SHARE
Ad

Malaysian Policeகோலாலம்பூர்-பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தை ஒன்று 18ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்தது. இந்தச் சம்பவம் ஸ்தாப்பாக்கில் உள்ள டானாவ் கோத்தா அடுக்குமாடிக் குடியிருப்பில் திங்கட்கிழமை அதிகாலை நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அக்குழந்தை தொப்புள்கொடி கூட முழுமையாக அறுபடாத நிலையில் காணப்பட்டதாகக் குறிப்பிடும் வங்சா மாஜு காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் முகமட் ராய் சுஹைனி சரிஃப், அதிகாலை 3 மணியளவில் பெற்ற தாயே அக்குழந்தையை வீசி எறிந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகக் கூறினார்.

“இதையடுத்து 39 வயதான பெண்மணி ஒருவர் கைதாகியுள்ளார். அவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 18ஆவது மாடியில் வசிக்கும் வீட்டின் குளியலறையில் ரத்தம் கசியும் நிலையில் காணப்பட்டதாக அதே வீட்டில் அவருடன் வசிப்பவர்கள் தெரிவித்தனர். குளியலறையில் இருந்து வீட்டு பால்கனி வரை ரத்தக்கறை காணப்பட்டது. அதிகாலை நேரத்தில் அப்பெண் வலியால் கதறும் சத்தம் கேட்டது என்றும் உடன் வசிப்பவர்கள் தெரிவித்தனர். கடந்த நவம்பர் மாதம் முதல் தனது ஐந்து வயது மகளுடன் அந்த வீட்டில் உள்ள ஓர் அறையை வாடகைக்கு எடுத்து அப்பெண்மணி தங்கியுள்ளார். அவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளதாகத் தெரிகிறது. வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கும் பொருட்டு அவரது கணவரைத் தேடி வருகிறோம்,” என முகமட் ராய் சுஹைனி சரிஃப் மேலும் தெரிவித்துள்ளார்.