புதுடெல்லி- அருண் ஜேட்லியின் (படம்) இந்த நிதிநிலை அறிக்கை ஏழைகளையும் சாமானியர்களையும் விவசாயிகளையும் மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகளோ, தங்களுக்கே உரிய மரபை பின்பற்றி, அருண் ஜெட்லியையும் அவரது நிதிநிலை அறிக்கையையும் கடுமையாக விமர்சித்துள்ளன.
வேளாண்மையையும் விவசாயிகளையும் அரவணைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் கூறும் நிலையில், வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
மத்திய வரவு செலவுத் திட்டத்தில் புதிய யோசனைகள் எதுவுமே காணப்படவில்லை என விமர்சித்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
இந்திய வரவு செலவுத் திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்:
- அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் சிகரெட்டுகளுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
- ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சேவை வரி உயர்த்தப்படவில்லை. இது வரி செலுத்துவோருக்கு பெரிய ஆறுதலை அளித்துள்ளது. ஆனால், செஸ் வரி 0.5 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
- இதன் எதிரொலியாக சேவை வரி தற்போது 15 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த வரி உயர்வு காரணமாக தொலைபேசி அழைப்புக் கட்டணம் அதிகரிக்கும். செல்பேசி அழைப்புக்கான கட்டணங்களும் அதிகரிக்கும்.
- விமான பயணங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.
- உணவகங்களில் சாப்பிடுவதற்கு கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
- சொத்து நிலம் (ரியல் எஸ்டேட்), காப்பீடு, விளம்பரம், கட்டட நிர்மாணங்கள், கடன் அட்டைகள், நிகழ்ச்சி மேலாண்மை போன்ற சேவைத் துறைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
- சொகுசுக் கார்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
- பீடி விலை உயரவில்லை,
- ஆனால் சிகரெட்டுகளுக்கான வரி 15 விழுக்காடாக உயர்ந்துள்ளது.