Home Featured தமிழ் நாடு விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்று 130 தொகுதிகளை ஒதுக்க பா.ஜ.க முடிவா?

விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்று 130 தொகுதிகளை ஒதுக்க பா.ஜ.க முடிவா?

462
0
SHARE
Ad

vijayakanthசென்னை – தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்று அக்கட்சிக்கு 130 தொகுதிகளை ஒதுக்க பாரதிய ஜனதா கட்சி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாஜக, மக்கள் நலக் கூட்டணி என அனைத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பேச்சுகளை நடத்தி வந்தது தேமுதிக.

இந்நிலையில் திமுக அணியில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டது. இதனால் திமுக- காங்கிரஸ் எனும் வலுவான இந்த அணிக்கு விஜயகாந்த் தானாகவே வந்துவிடுவார் என நம்பிக்கையுடன் அந்த கட்சிகள் காத்து கொண்டிருக்கின்றன.

பாஜகவோ எப்படியும் தேமுதிகவை வளைத்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறது. இதற்காக தொடர்ச்சியாக அடுத்தடுத்து தலைவர்களை அனுப்பி வைக்கிறது பாஜக. திமுக அணியில், 78 தொகுதிகள், துணை முதல்வர் மற்றும் 10 அமைச்சர்கள் பதவி, உள்ளாட்சித் தேர்தலில் 50% இடம் என்பதுதான் தேமுதிகவின் நிபந்தனையாக இருந்தது.

#TamilSchoolmychoice

இதனை அடியோடு நிராகரித்துவிட்டது திமுக. அதிகபட்சமாக 54-60 தொகுதிகள்தான் தர முடியும் என்பது திமுகவின் நிலைப்பாடு. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிருப்தியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால்தான் திமுக- தேமுதிக கூட்டணி உருவாவதில் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்- அத்துடன் 130 தொகுதிகளை தருகிறோம் என்ற பேரத்துடன் பேச்சுவார்த்தைகளை மும்முரமாக நடத்தி வருகிறது.

இந்த பேச்சுவார்த்தைகளில் ஒரு நிபந்தனையாக ‘பாமகவை சேர்க்க வேண்டாம்’ என்றும் தேமுதிக தரப்பு கூறிவருகிறதாம். இதனால்தான் சென்னை வந்த தமிழக பாஜக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாமக தலைவர்கள் எவரையும் சந்திக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணி, முதல்வர் வேட்பாளருடன் 100 தொகுதிகளைத் தர உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் அதிக தொகுதிகள் தரும் பாஜகவின் நிபந்தனைகளை ஏற்பாரா விஜயகாந்த்? என்பது ஓரிருநாட்களில் தெரிந்துவிடும்.