லண்டன் – மனிதர்களின் உடலில் ஊடுருவி பெண்களின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் ஜிக்கா வைரஸால் நரம்பு ரீதியான நோய்களுக்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து கொசுக்கடியால் ஜிக்கா எனப்படும் புதிய கிருமியின் தொற்று அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு உகாண்டாவில் குரங்குகளை தாக்கியபோதுதான் கிருமியின் பெயர் ஜிக்கா வைரஸ் பற்றி தெரியவந்தது.
பிறகு 1952 ஆம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. சமீபகாலத்தில் 2007 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பசிபிக் நாடுகளில் ஜிக்கா வைரஸ் தாக்கியது.
அதையடுத்து கடந்த ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், 13 அமெரிக்க நாடுகளிலும் மற்றும் ஆப்பிரிக்காவிலும் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில் எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன.
சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ள 4,000க்கும் அதிகமான குழந்தைகள் இதுபோன்று பிறந்துள்ளன. இந்த நோய் உலகம் முழுவதும் 40 லட்சம் பேரை தாக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. உலக சுகாதார நிலையம் சர்வதேச அவசரநிலையை பிரகடனம் செய்து உள்ளது.
பாலியல் உறவு மூலமாகவும் ஜிக்கா வைரஸ் பரவுகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது, இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பக்கவாதம் போன்று, நரம்பு ரீதியான நோய்களுக்கான ஆபத்தையும் ஜிக்கா வைரஸ் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 42 பேரின் இரத்த மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் ஜிக்கா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 6 நாட்கள் கழித்து நரம்பு பிரச்சனைகள் உடலில் ஏற்பட தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ள நாடுகளில், நரம்பு ரீதியிலான நோய்களும் அதிகரிக்கலாம் என்றும் இந்த ஆய்வு தொடர்பான முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.