பெட்டாலிங் ஜெயா – கடந்த சில வாரங்களாக ஜிக்கா தொற்று நோய் பாதிப்பு குறித்த செய்திகள் எதுவும் வராத நிலையில், இந்த கிருமியால் தாக்கப்பட்ட 67 வயதான மற்றொரு நபர் பெட்டாலிங் ஜெயாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள 8-வது சம்பவமாகும். கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி இந்த புதிய ஜிக்கா பாதிப்புக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டார்.
இரண்டு நாட்களாக காய்ச்சல், மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவற்றின் பாதிப்பால் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி இந்த நபர் தாங்லிங் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். தொடர்ந்து அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டபோது எந்தவித கிருமியும் கண்டுபிடிக்கப்படவில்லை. டெங்கி காய்ச்சல் பரிசோதனைகளும் அவருக்கு நடத்தப்பட்டன.
இருப்பினும், இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சுங்கை பூலோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டபோது, டிசம்பர் 9-ஆம் தேதி ஜிக்கா கிருமி பாதிப்பு அந்த நபருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஐஎம்ஆர் எனப்படும் மருத்துவ பரிசோதனை மையத்துக்கு மறு உறுதிக்காக, இரத்த மாதிரிகளும், சிறுநீர் மாதிரிகளும் அனுப்பப்பட்டபோது ஜிக்கா கிருமி பாதிப்பு இருப்பதை ஐஎம்ஆர் டிசம்பர் 14-ஆம் தேதி உறுதிப்படுத்தியது.
இந்த விவரங்களைத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் நூர் ஹிஷாம் (படம்), செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பின்னர் அடையாளம் காணப்படும் 8-வது சம்பவம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தங்களின் சுற்றுப் புறங்களை மக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஏடிஸ் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நூர் ஹிஷாம் அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளையில் ஜிக்கா கிருமி பாதிப்புக்கான அடையாளங்களான காய்ச்சல், தோல் அரிப்பு, தலைவலி, தசை வலிகள், போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகிலிருந்து மருத்துவரை அணுக வேண்டும் என்றும் நூர் ஹிஷாம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.