கோலாலம்பூர் – சரவாக்கிலுள்ள மிரி, கோலாலம்பூரிலுள்ள ஸ்தப்பாக் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த மிரியைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணிப் பெண்ணிற்கு முதலில், ஜிக்கா வைரஸ் கண்டறியப்பட்டது என்றும், பின்னர் அதேநாளில் ஸ்தாப்பாவில் வசிக்கும் அவரது 39 வயது சகோதரிக்கும் ஜிக்கா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி, ஸ்தாப்பாக்கில் இருந்து மிரி சென்ற அவர், தனது குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு, கடந்த செப்டம்பர் 6-ம் தேதி தான் கோலாலம்பூர் திரும்பியுள்ளார். அதன் பிறகு தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஜிக்கா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மிரியில் அவர்கள் வசிக்கும் பகுதி அருகே கொசு மருந்து தெளிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டாக்டர் சுப்ரா அறிவித்துள்ளார்.