ஜோகூர் பாரு – ஜோகூர்பாரு கூலாயில், சுமார் 5 மணி நேரங்களுக்கும் மேலாக, காரில் தனித்துவிடப்பட்ட 1 வயது பெண் குழந்தை, மூச்சுத் திணறி இறந்தது.
காரின் பின்னிருக்கையில் தனது குழந்தை இருப்பது தெரியாமலேயே, காரை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்ற தந்தை, பல மணி நேரங்களுக்குப் பின்னர் தான் அதனை உணர்ந்துள்ளார்.
உடனடியாகக் காரில் சென்று பார்த்த போது குழந்தை மிகவும் பலவீனமான நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்துள்ளது.
என்றாலும், கூலாய் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது, அங்கு அக்குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணியளவில் கூலாய் காவல்நிலையத்தில் அக்குழந்தையின் தந்தை அளித்த புகாரில், குழந்தைப் பராமரிப்பாளரிடம் ஒப்படைப்பதற்காகத் தனது மனைவி காரின் பின்னிருக்கையில் காலை 9.30 மணியளவில் குழந்தையை வைத்துவிட்டதாகவும், ஆனால், அதை அறியாத தான், சாலேங்கிலுள்ள தனது வேலையிடத்திற்கு நேரடியாகச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர், பிற்பகல் 3 மணியளவில் குழந்தைப் பராமரிப்பாளர் அழைத்து, ஏன் குழந்தையை இன்று கொண்டு வந்துவிடவில்லை? என்று கேட்ட போது தான் காரின் பின்னிருக்கையில் குழந்தை இருப்பதைத் தான் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இச்சம்பவம், குழந்தைகள் சட்டம் 2001, பிரிவு 31 (ஏ)-வின் கீழ், அலட்சியத்தால் குழந்தை இறந்தது என்ற வகையில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூலாய் காவல்துறை தெரிவித்துள்ளது.